Saturday, November 21, 2026 12:10 pm
ஜப்பானின் பிரதமர் சனாயே டகாயிச்சி தலைமையிலான நிர்வாகத்தின் கொள்கைகள் ,நடவடிக்கைகளுக்கு எதிராக, வியாழக்கிழமை மாலை ஜப்பானின் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். நாட்டின் அமைதிவாத அரசியலமைப்பைத் திருத்துவதற்கான முயற்சிகள் , ஜப்பானின் இராணுவத் திறன்களை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் ஆகியவையும் அடங்கும்.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் ஜின்ஹுவா செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “அமைதிவாத அரசியலமைப்பைத் திருத்த முயற்சிப்பது, பாராளுமன்ற இடங்களைக் குறைப்பதற்கான திட்டங்கள் என, இவை அனைத்தும் சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கக்கூடும்… டகாயிச்சி நிர்வாகத்தின் பல செயல்பாடுகள் மிகுந்த கவலையளிக்கின்றன” என்று தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 13,000 பேர் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். போராட்டக்காரர்கள், “அரசியலமைப்பைப் பாதுகாப்போம்”, “போருக்கான தயாரிப்புகளை நிறுத்துங்கள்”, “அணு ஆயுதமற்ற கொள்கைகளில் (Three Non-Nuclear Principles) எந்த விதிவிலக்கும் கூடாது” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
பிரதமர் பதவியேற்றது முதல், சனாயே டகாயிச்சி அரசியலமைப்பைத் திருத்துவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி வருகிறார். மேலும், ஜப்பானின் ராணுவத் திறன்களை வலுப்படுத்துவதன் மூலம், போருக்குப் பிந்தைய அமைதிவாதத்தை வலியுறுத்தும் அந்த உயரிய சட்டத்தின் சாராம்சத்தைச் சிதைக்கும் முயற்சிகளை அவர் தீவிரப்படுத்தியுள்ளார். டிசம்பர் மாதம், நாட்டின் மூன்று முக்கிய தேசிய பாதுகாப்பு ஆவணங்களைத் திருத்தி வெளியிடவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதில், தாக்குதல் நடத்தக்கூடிய ராணுவத் திறன்களை வளர்ப்பதற்கும், நாட்டின் ராணுவப் பங்களிப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவுள்ளது.
ஜப்பானிய ஊடகங்களின் சமீபத்திய செய்திகளின்படி, திருத்தப்படவுள்ள பாதுகாப்பு ஆவணங்களில் ‘அணு ஆயுதமற்ற கொள்கைகள்’ (Three Non-Nuclear Principles) தொடர்பான விதிகளில் சில விதிவிலக்குகளைச் சேர்க்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. இது, அவசர காலங்களில் ஜப்பானுக்குள் அணு ஆயுதங்களைக் கொண்டுவருவதற்கு வழிவகுக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

