Friday, October 16, 2026 3:37 pm
சவூதி அரேபியாவில் நிலவும் பாதுகாப்புச் சூழல் காரணமாக, கொழும்புக்கும் சவூதி அரேபியாவின் ரியாத், தமாம் ஆகிய நகரங்களுக்கும் இடையேயான அனைத்து விமான சேவைகளின் நிறுத்தம் ஒக்டோபர் 24, ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இன்று வெள்ளிகிழமை (16) வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், பயணிகள் ,விமானப் பணியாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிக விமானச் செயல்பாடுகளுக்கு நிலவும் சூழல் உகந்ததாக மதிப்பிடப்பட்டவுடன், இரு இடங்களுக்குமான சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.
மேலதிக தகவல்களைப் பெற விரும்பும் பயணிகள், அதன் ஹொட்லைன் எண்ணான 1979 (இலங்கைக்குள்) அல்லது +94 11 777 1979 (சர்வதேசம்) ஆகியவற்றைத் தொடர்புகொள்ளுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவுறுத்தியுள்ளது.
பயணிகள் +94 74 444 1979 என்ற எண்ணில் வாட்ஸ்அப் (அரட்டை மட்டும்), தங்களது பயண முகவர்கள் மூலமாகவோ அல்லது www.srilankan.com என்ற அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடுவதன் மூலமாகவோ விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

