Friday, October 16, 2026 3:58 pm
1993-க்குப் பிறகு ஃபார்முலா 1 பந்தயங்கள் ஆப்பிரிக்காவிற்குத் திரும்பவுள்ளன. 2030-களின் தொடக்கத்தில் ருவாண்டாவில் பந்தயங்களை நடத்துவதற்கான 10 ஆண்டு கால ஒப்பந்தம் செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ருவாண்டாவின் தலைநகரான கிகாலியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் ஃபார்முலா 1-ன் உயர்மட்ட அதிகாரிகள் முன்னிலையில், ‘ஃபார்முலா 1 ஆப்பிரிக்க கிராண்ட் பிரிக்ஸ்’ (African Grand Prix) போட்டிக்கான இந்த ஒப்பந்தத்தை ருவாண்டா ஜனாதிபதி பால் ககாமே அறிவித்தார்.
இந்த நீண்ட கால ஒப்பந்தத்தின்படி, ருவாண்டாவின் கிழக்குப் பகுதியிலுள்ள புகேசரா (Bugesera) மாவட்டத்தில் இதற்கெனவே பிரத்யேகமாக வடிவமைக்கப்படும் புதிய பந்தயப் பாதை (circuit) கட்டி முடிக்கப்பட்ட பிறகு, அங்கு முதல் பந்தயம் நடைபெறும்.
ஆப்பிரிக்கா முதன்முதலில் 1958-ல் F1 உலக சம்பியன்ஷிப் பந்தயத்தை நடத்தியது; அப்போது மொராக்கோவின் காசாபிளாங்காவில் உள்ள ஐன்-டியாப் (Ain-Diab) சுற்றுகளத்தில் அந்தப் பருவத்தின் இறுதிப் போட்டி நடைபெற்றது.
அதன்பிறகு, தென்னாப்பிரிக்கா இக்கண்டத்தின் முக்கிய F1 மையமாக மாறியது; 1962-ல் கிழக்கு லண்டனில் (East London) தனது முதல் உலக சாம்பியன்ஷிப் பந்தயத்தை நடத்தியது. 1965 வரை அங்கு நடைபெற்ற இப்பந்தயம், 1967-ல் ஜோகன்னஸ்பர்க்கிற்கு அருகிலுள்ள கியாலமிக்கு (Kyalami) மாற்றப்பட்டது.
இனவெறிக் கொள்கை நிலவிய காலத்திலும் கியாலமியில் தென்னாப்பிரிக்க கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் தொடர்ந்து நடைபெற்றது; இருப்பினும், நாட்டின் இனப் பிரிவினை முறைக்கு எதிராக வளர்ந்து வந்த சர்வதேச எதிர்ப்பின் காரணமாக 1985-க்குப் பிறகு பந்தய அட்டவணையிலிருந்து இது நீக்கப்பட்டது.
தென்னாப்பிரிக்கா இனவெறிக் கொள்கையிலிருந்து விடுபட்டு வந்த நிலையில், 1992 , 1993-ல் இரண்டு பந்தயங்களுக்காக F1 மீண்டும் கியாலமிக்குத் திரும்பியது; ஆனால் அதன்பிறகு இக்கண்டத்தில் எங்கும் சம்பியன்ஷிப் பந்தயங்கள் நடைபெறவில்லை.

