Friday, October 16, 2026 3:51 pm
மாணவர்களின் பசிப்பிணியை போக்கிய பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான ஜூலை 15ம் திகதியை சிறப்பிக்கும் வகையில், தமிழகத்தின் அனைத்து முக்கிய திருக்கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் அன்னதானமும் நடத்தப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அறநிலையத்துறை ஆணையரின் பரிந்துரையை ஏற்று, அரசு செயலாளர் ஜே.ராஜாராமன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இந்த விழாவை நடத்துவதற்காக அரசாணை சில முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ளது.
அதன்படி, ஜூலை 15-க்கு முன்பே கோவில்களின் வசதிக்கு ஏற்ப உரிய நாளில் விழா நடத்தப்பட வேண்டும். அன்னதானத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் எந்தவித சமரசமுமின்றி 100% தூய்மையான சைவமாகவும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை செயல் அலுவலர்கள் நேரில் உறுதி செய்ய வேண்டும்.
இதற்காக அரசுக்கு எந்தவித கூடுதல் நிதிச்சுமையும் ஏற்படாதவாறு, ஏற்கனவே உள்ள வரவு-செலவு திட்டத்திற்குள் ஆடம்பரமின்றி எளிய முறையில் நடத்தப்பட வேண்டும். மண்டல இணை மற்றும் உதவி ஆணையர்கள் இதைக் களத்தில் இறங்கி தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

