Wednesday, May 6, 2026 8:27 pm
சந்தர்ப்பவாதத்திற்காக தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் நிர்வாகிகள் இராஜினாமா செய்துள்ளனர். தேசிய மாணவர் யூனியனின் செயலாளர் தயானந்த் கார்த்திக் , AIPC நிர்வாகி பிரனேஷ் பாலாஜி ஆகியோர் தங்கள் இராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பியுள்ளனர். தவெக கூட்டணியில் இணைந்ததும் காங்கிரஸ் நிர்வாகிகளின் விலகல் அக்கட்சி தலைமைக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
புதிதாக அமையும் தவெக அரசில் காங்கிரஸ் பங்கு பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், திமுக இருக்கும் நிலையில், அடுத்து வரும் உள்ளாட்சி தொடங்கி மக்களவைத் தேர்தல் வரை தவெக உடனான கூட்டணி தொடரும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவு, கட்சிக்குள்ளேயே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கட்சித் தலைமையின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். சந்தர்ப்பவாதத்திற்காக தவெக உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளதாக குற்றம்சாட்டி காங்கிரஸ் நிர்வாகிகள் இராஜினாமா செய்துள்ளனர்.
தேசிய மாணவர் யூனியனின் செயலாளர் தயானந்த் கார்த்திக் வெளியிட்டுள்ள பதிவில், “பதவியைத் தாண்டி எனக்கு என் சுயமரியாதையும், என் மண்ணின் அரசியல் அறமும் தான் முக்கியம். உழைப்புக்கு மதிப்பற்ற, விசுவாசத்திற்கு இடமில்லாத இந்த அமைப்பில் இருந்து வெளியேறுகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் அலிம் அல் புஹாரி வெளியிட்டுள்ள பதிவில், “கொள்கைப் பிடிப்பே அரசியல், சந்தர்ப்பவாதம் அல்ல. இதே சந்தர்ப்பவாதத்தை, பா.ஜ.க வும் அதிமுகவும் செய்து வருகிறது. இப்போது நாம் அதை செய்யக்கூடாது.” எனத் தெரிவித்துள்ளார்.

