Saturday, November 7, 2026 3:52 pm
எரிபொருள் மானியங்கள் வழங்குவதற்காக அரசாங்கத்தால் இதுவரை 98 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் , வரும் மாதத்திற்குப் பிறகும் இந்த மானியங்களைத் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான டாக்டர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ, தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நிலை ஆணை 27(2)-ன் கீழ் இலங்கை தமிழ் அரசுக் கட்சி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சணக்கியன் ரசமாணிக்கம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், மத்திய கிழக்கில் மோதல் தொடங்கியதிலிருந்து, எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாக்கவும், விலை நிலைத்தன்மையை பராமரிக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், எரிபொருள் விலை நிர்ணய சூத்திரத்தின்படி எரிபொருள் விலைகள் மாதந்தோறும் சரிசெய்யப்படுவதாகவும் கூறினார்.
இந்த விலை மாற்றங்களின் போது கருவூலத்தின் மூலம் மானியங்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டில் மட்டும் இவ்நோக்கத்திற்காக ரூ.98 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இதில் தற்போதைய மூன்று மாத காலத்திற்காக மட்டும் ரூ.41 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (சிபிசி) மற்றும் இலங்கை மின்சார சபையின் (சிஇபி) துணை நிறுவனங்களுக்கும் நிவாரணம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் போது மானியங்கள் வழங்கப்பட்டன; குறிப்பாக, 180 யூனிட்டுகளுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கான மின் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை.
எரிபொருள் மானியங்களுக்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி, டிசம்பர் 31-ஆம் திகதிக்குள் தீர்ந்துவிடும். ஜனவரி மாதம் முதல் இந்த மானியங்களைத் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன, மேலும் தேவையெனக் கருதப்பட்டால் நாங்கள் அவற்றை தொடர்ந்து வழங்குவோம்,” என்று அமைச்சர் தெரிவித்தார்.

