Tuesday, May 19, 2026 3:56 pm
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்குள் உட்கட்சி பூசல்களும் சலசலப்புகளும் தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, அக்கட்சியின் முக்கிய தலைவர்களான எடப்பாடி பழனிசாமி , எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோருக்கு இடையே கடுமையான பிளவு ஏற்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று அவசரமாகத் தொடங்கியது.
தேர்தல் தோல்வி ,கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்து விவாதிப்பதற்காக இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மொத்தம் 17 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.
முக்கிய தலைவர்களின் அதிருப்தி மற்றும் குறைவான மாவட்ட செயலாளர்களின் வருகை ஆகியவை எடப்பாடி பழனிசாமியின் தலைமைக்கு ஏற்பட்டுள்ள புதிய சவாலாக பார்க்கப்படுகிறது. இந்த உட்கட்சி மோதல் , தேர்தல் தோல்விக்கு பிந்தைய அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து இக்கூட்டத்தில் மிக தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருவதால், தமிழக அரசியல் களம் தற்போது பெரும் சூடுபிடித்துள்ளது.

