Monday, May 18, 2026 8:52 pm
தமிழக சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலும் பிளவும் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. கட்சியின் மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி , எஸ்.பி.வேலுமணி ஆகியோருக்கு இடையே தலைமை போட்டி தீவிரமடைந்துள்ள சூழலில், நாளை காலை 9 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அவசரமாக நடைபெறும் என்று பொதுச்செயலாளர் இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சமீபகாலமாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள அப்பட்டமான பிளவு மற்றும் எம்.எல்.ஏ-க்களின் அதிருப்தி காரணமாக, கட்சி தலைமையின் உத்தரவை மீறிய பல மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து இபிஎஸ் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். தங்களின் தற்போதைய அரசியல் இருப்பை தக்கவைத்து கொள்ளவும், உள்கட்சி குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்த அவசர கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அதிமுகவின் மொத்தமுள்ள 82 மாவட்ட செயலாளர்களில் சுமார் 50 மாவட்ட செயலாளர்களின் முழுமையான ஆதரவு எடப்பாடிக்கு எதிராக செயல்படும் எஸ்.பி.வேலுமணி அணிக்கு இருப்பதாக தற்போதைய ரகசிய தகவல்கள் கசிந்துள்ளன.
சசிகலா மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் கட்சிக்குள் கொண்டுவர வேலுமணி தரப்பு முயன்று வரும் வேளையில், பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் இபிஎஸ் கையை விட்டு நழுவியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை நடக்கும் இந்த ஆலோசனை கூட்டம் அதிமுகவின் எதிர்கால தலைமையைத் தீர்மானிக்கும் மிக முக்கிய கூட்டமாக பார்க்கப்படுகிறது.

