Tuesday, August 25, 2026 8:14 pm
தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தொடர்பான தேர்தல் வழக்குகளில், சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. தேர்தல் வழக்குகளை நிராகரிக்க கோரும் மனுக்களை ஆகஸ்ட் 27ம் திகதிக்குள் தாக்கல் செய்யாவிட்டால், தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தேர்தல் வழக்குகளை தொடர்ந்துள்ளனர். இதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்குகள் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, விஜய் தரப்பில் தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய இரண்டு வாரங்கள் அவகாசம் கோரப்பட்டது. ஆனால், நீதிபதி அதற்கு அனுமதி மறுத்தார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 86-வது பிரிவின்படி தேர்தல் வழக்குகள் ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார். இதே கோரிக்கைக்கு ஏற்கனவே கூடுதல் அவகாசம் வழங்க முடியாது என தெரிவித்திருந்ததையும் நினைவுபடுத்தினார்.
ஆதவ் அர்ஜுனா தரப்பிலும் இதேபோல் அவகாசம் கோரப்பட்டது. இரு தரப்பினருக்கும் ஆகஸ்ட் 27 வரை மட்டும் அவகாசம் வழங்கிய நீதிமன்றம், அதற்குள் மனுத்தாக்கல் செய்யாவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

