Monday, October 19, 2026 8:32 am
பிரான்ஸில் கடந்த சனிக்கிழமையன்று நாடு முழுவதும் நடந்த போராட்டங்களின் போது வன்முறைக்குக் காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதாக பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தார்.
“அழித்தவர்கள் அதற்கான விலையைக் கொடுக்க வேண்டும். கொள்ளையடித்தவர்கள் அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும்,” என்று தொலைக்காட்சி உரையில் கூறிய மக்ரோன், வன்முறையின் போது செய்யப்பட்ட குற்றங்கள் மீது நீதித்துறை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதற்கிடையில், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சமீப வாரங்களில் இளைஞர்கள் வெளிப்படுத்திய “ஆழ்ந்த கவலையை” தாம் புரிந்துகொள்வதாக மக்ரோன் கூறினார். மேலும், வரும் வாரத்தில், இளைஞர்களின் கவலைகளுக்குத் தீர்வு காணும் வகையில், மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிற்சங்கங்கள், முதலாளிகள் அமைப்புகள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து அரசாங்கம் செயல்படும் என்றும் அவர் கூறினார்.
வாழ்க்கைச் செலவு மற்றும் எரிபொருள் விலைகள் குறித்த பொதுமக்களின் கவலைகளையும் இந்தப் போராட்டங்கள் பிரதிபலிப்பதாக மக்ரோன் கூறினார். குடியிருப்பாளர்களின் வாங்கும் சக்தி என்ற முக்கியப் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
வன்முறையால் பாதிக்கப்பட்ட இந்தப் போராட்டங்களின்போது மொத்தம் 2,397 பேர் கைது செய்யப்பட்டதாக, பிரெஞ்சு உள்துறை அமைச்சு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் 997 பொலிஸ் அதிகாரிகள் ,ஜெண்டார்ம்கள் ஆகியோர் காயமடைந்தனர், அவர்களில் ஏழு பேர் பலத்த காயமடைந்தனர்.
செப்டம்பர் மாதம் முதல், சிறந்த கல்வி நிலைமைகளைக் கோரி பிரான்ஸ் பல கட்டங்களாக மாபெரும் மாணவர் போராட்டங்களைக் கண்டுள்ளது.

