Friday, October 23, 2026 5:17 pm
கடுகன்னாவ இரயில் நிலையத்திற்கு அருகில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய சீரமைப்புப் பணிகளுக்காக, ரம்புக்கனை பேராதனை, கம்பொலை ஆகியவற்றுக்கிடையிலான இடையிலான ரயில் சேவைகள் ஒக்டோபர் 24 , 25 ஆகிய திகதிகளில் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என இரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவால், மண்ணும் குப்பைகளும் ரயில் தண்டவாளத்தின் மீது சரிந்து விழுந்து, ஆபத்தான சூழலை உருவாக்கியுள்ளன. இந்த மண் குப்பைஆகியவற்றை அகற்றி, பாதிக்கப்பட்ட ரயில் பாதையைச் சீரமைப்பதற்கான அவசரப் பணிகளை சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் மேற்கொள்ள இலங்கை இரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நாட்களில் பயணம் செய்வதற்காக ஏற்கனவே டிக்கெட்டுகளை வாங்கிய, இருக்கைகளை முன்பதிவு செய்த பயணிகள், எந்தவொரு ரயில் நிலையத்திலும் முழுப் பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என இரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

