Friday, July 3, 2026 2:24 pm
திமுக ஆட்சியில் மீன்வளம் மற்றும் மீனவ நலத்துறை அமைச்சராக செயல்பட்டு வந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். தற்போது திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருக்கிறார். கடந்த மாதம் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன் முதலமைச்சர் விஜயை ஒருமையிலும், அவதூறாகவும் பேசினார்.
சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியது தவெகவினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணன் மீது தவெகவினர் ஆத்தூர் பொலிஸ் நிலையத்தில் புகாரளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர். எந்த நேரமும் அவர் கைது செய்யப்படலாம் என்கிற நிலையில் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறை அதிகாரிகள் தற்போது கைது செய்திருக்கிறார்கள்.

