Thursday, September 24, 2026 5:16 pm
தமிழ் திரையுலகில் வாரிசு நடிகர்கள், வாரிசு இயக்குநர்கள் அறிமுகமாகும்போது, அவர்களைச் சுற்றி எதிர்பார்ப்புகளும் விமர்சனங்களும் எழுவது வழக்கம். அந்த வகையில், தமிழக முதல்வர் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் சிக்மா திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.
நடிகர் விஜய்யின் மகன் என்பதால் சஞ்சய்யின் திரையுலக அறிமுகம் ஆரம்பம் முதலே கவனம் பெற்றுள்ளது. அதேநேரத்தில், தனது தந்தையின் புகழை பயன்படுத்தாமல், இயக்குநராக தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர் இந்தப் படத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
சஞ்சய் இயக்கும் முதல் படம் என்பதால், படத்தின் கதை, திரைக்கதை, நடிகர்கள் தேர்வு ,அவரது இயக்குநர் பணிக்கான அணுகுமுறை குறித்து ரசிகர்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளன. குறிப்பாக, விஜய்யின் மகன் என்ற அடையாளத்தைத் தாண்டி சஞ்சய் எப்படி ஒரு இயக்குநராக தன்னை நிரூபிக்கப் போகிறார் என்பதும் அனைவரின் எதிர்பார்ப்பும் உள்ளது.
இந்த நிலையில், மக்கள் உங்களை எப்படி பார்க்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்? முதலமைச்சரின் மகனாகவா? ஒரு சூப்பர் ஸ்டாரின் மகனாகவா? அல்லது தனது முதல் படத்தை இயக்கும் 25 வயது இயக்குநராகவா? என்று சஞ்சய்யிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த சஞ்சய், எனது குடும்பத்தின் பாரம்பரியம் தற்போதைய அரசியல் மாற்றங்களுடன் சேர்ந்து என்றென்றும் தொடரும். மறுபுறம், திரையுலகில் எனக்கென ஒரு தனி முத்திரையை பதிப்பதற்காகவே இந்தப் படத்தை இயக்குகிறேன். ‘சிக்மா’ படத்திற்குப் பிறகு கிடைக்கும் வெற்றியும், அதன் மூலம் கிடைக்கும் அறிமுகமும் எனக்கென ஒரு சொந்த அடையாளத்தை உருவாக்கிக் கொள்வதில் உதவ வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்துவேன் என்று சஞ்சய் கூறியுள்ளார்.

