Tuesday, July 14, 2026 10:12 pm
நேபாளத்தில் கடந்த ஆண்டு அரசுக்கு எதிராக வெடித்த ஜென் – ஸி இளைஞர் போராட்டத்தை தொடர்ந்து பிரதமரானார் ‘ராப்’ பாடகர் பாலன் ஷா. இந்நிலையில் தான் அவரை பிரதமராக்கிய ஜென் – ஸி இளைஞர்கள் தற்போது அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் அவர் பதவி விலக கோரிக்கை வலுத்துள்ள நிலையில் மீண்டும் நேபாளத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நேபாளத்தின் பிரதமராக இருந்தவர் கேபி ஷர்மா ஒலி. இவர் கடந்த 2025 செப்டம்பர் மாதம் 12ம் திகதி வரை பிரதமராக இருந்தார். இந்நிலையில் தான் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், ஊழலுக்கு எதிராக Gen – Z இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இது வன்முறையானது. இதையடுத்து கேபி ஷர்மா ஒலி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு இடைக்கால பிரதமராக கடந்த 2025 செப்டம்பர் 12ம் திகதி முதல் 2026 மார்ச் மாதம் 27 ம் திகதி வரை சுஷிலா கார்கி பொறுப்பு வகித்தார். அதன்பிறகு நடந்த பொதுத்தேர்தலில் தேசிய சுதந்திர கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்த கட்சியின் தலைவரான ‘ராப்’ பாடகர் பாலன் ஷா பிரதமரானார்.
தற்போது பாலன் ஷாவிற்கு எதிராக மீண்டும் Gen – Z போராட்டம் வெடித்துள்ளது. அதாவது கடந்த 9 ம் திகதி தலைநகர் காத்மாண்டில் கணேஷ் நேபாளி என்ற வாடகை வாகன டிரைவர் தீக்குளித்து இறந்தார். ‘நோ பார்க்கிங்’ பகுதியில் அவர் வாகனத்தை நிறுத்தியதால் பொலிஸாருக்கும், அவருக்கும் ஏற்பட்ட பிரச்சனையில் மனம் நொந்து தீக்குளித்து தற்கொலை செய்தார்.
இதனால் கோபமான ஜென் – ஸி இளைஞர்கள் பாலன் ஷாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் ஆதரவு வழங்கி உள்ளனர். பாலன் ஷா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினரும், போராட்டக்காரர்களும் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

