Wednesday, April 22, 2026 2:08 am
போர் நிறுத்தத்தை நீடிக்க பாகிஸ்தான் வேண்டுகோள்
அமெரிக்காவும் ஈரானும் தங்களது இரண்டு வார கால போர் நிறுத்தத்தை நீடிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்க தூதரகப் பொறுப்பாளர் நடாலி ஏ. பேக்கருடன் நடந்த சந்திப்பின்போது, துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார் இந்த அழைப்பை விடுத்ததாக, செவ்வாயன்று வெளியுறவு அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நிலவிவரும் சவால்களை எதிர்கொள்வதற்கும், நீடித்த பிராந்திய அமைதி ,ஸ்திரத்தன்மையை அடைவதற்கும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரமே ஒரே சாத்தியமான வழி என்பதை பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக, அந்த சந்திப்பின்போது துணைப் பிரதமர் டார் அடிக்கோடிட்டுக் காட்டினார் என வெளியுறவு அலுவலகம் கூறியது.
வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே “ஈடுபாட்டின் அவசியத்தை” வலியுறுத்திய துணைப் பிரதமர் டார், போர் நிறுத்தத்தை நீடிப்பது குறித்து இரு தரப்பினரும் பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இரு தரப்பினருக்கும் இடையிலான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான தயாரிப்புகளை இஸ்லாமாபாத் தொடர்ந்து வரும் நிலையில், போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான தனது தூதுக்குழு பேச்சுவார்த்தைகளுக்காக விரைவில் இஸ்லாமாபாத்த்துக்கு செல்லும் என வாஷிங்டன் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், இதில் பங்கேற்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என தெஹ்ரான் கூறியுள்ளது.
அமெரிக்கத் தூதுக்குழுவில் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் மத்திய கிழக்குக்கான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோரும் இடம்பெறுவார்கள் என ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்வதற்காக எந்தத் தூதுக்குழுவும் இதுவரை பாகிஸ்தானுக்குப் புறப்படவில்லை என ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இதன்மூலம், ஈரானியப் பிரதிநிதிகள் இஸ்லாமாபாத்திற்குப் பயணம் செய்வதாக அறிவித்த சர்வதேச செய்தி அறிக்கைகளை அது மறுத்துள்ளது.
வாஷிங்டன் நேரப்படி புதன்கிழமை மாலை” போர் நிறுத்தம் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ப்ளூம்பெர்க்கிடம், ” கூறியிருந்தார்.

