Monday, June 15, 2026 10:53 pm
இங்கிலாந்து நாட்டில் தற்போது மகளிருக்கான ஐசிசி 2026 ரி20 உலக உலகக்கிண்னத் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணியை எதிர்த்து விளையாடியது. அந்த வகையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் துடுப்பெடுத்தாடியது.
முதலில் விளையாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்கள் அடித்தது. இந்திய மகளிர் அணி சார்பாக அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 68 ஓட்டங்களையும், ஹர்மன்ப்ரீத் கவுர் 36 ஓட்டங்களையும் குவித்தனர். 171 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் மகளிர் அணி இந்திய மகளிர் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 17 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய மகளிர் அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய தீப்தி சர்மா 4 ஓவர்களில் வெறும் 10 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் இந்த போட்டியின் போது டாஸ் போடுகையில் இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் பாகிஸ்தான் கேப்டனான பாத்திமா சனாவுடன் கைகுலுக்கவில்லை. ஏற்கனவே இந்தியா , பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே சுமூக உறவு இல்லாததாலும், பகல்ஹாம் தாக்குதல் நடைபெற்றதாலும் இந்திய ஆடவர் அணி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்கவில்லை.

