Wednesday, August 12, 2026 7:15 pm
ஆப்கானிஸ்தானில் 2021-ஆம் ஆண்டு முதல் சுமார் 24 இலட்சம் சிறுமிகள் இடைநிலைக் கல்வியிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர் என்று யுனெஸ்கோ செவ்வாயன்று கூறியது. இந்த நீடித்த கட்டுப்பாடுகள் நாட்டின் கல்வி நெருக்கடியை ஆழப்படுத்துவதோடு, அதன் எதிர்கால உழைக்கும் வர்க்கத்திற்கு அச்சுறுத்தலாகவும் உள்ளன என்று அது எச்சரித்துள்ளது.
தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்து ஐந்தாம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னதாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோவின் கூற்றுப்படி, உலகில் சிறுமிகளும் பெண்களும் இடைநிலை மற்றும் உயர் கல்வியிலிருந்து முறையாகத் தடுக்கப்பட்டுள்ள ஒரே நாடாக ஆப்கானிஸ்தான் உள்ளது.
2022-ஆம் ஆண்டு முதல் பெண்கள் பல்கலைக்கழகங்களிலிருந்தும் விலக்கப்பட்டுள்ளனர். வேலைவாய்ப்பு ,பொது வாழ்வில் பங்கேற்பதில் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.
இதன் விளைவுகள் தற்போதைய தலைமுறையைத் தாண்டியும் நீடிக்கக்கூடும் என்று யுனெஸ்கோ எச்சரித்துள்ளது. பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மீதான கட்டுப்பாடுகள், 2066-ஆம் ஆண்டுக்குள் ஆப்கானிஸ்தானின் உழைக்கும் வர்க்கத்தில் 6 லட்சம் பெண்கள் குறைவதற்கும், சுமார் 9.6 பில்லியன் டொலர் ஒட்டுமொத்த வருமான இழப்புகளுக்கும் வழிவகுக்கும் என்று அது மதிப்பிடுகிறது. கல்வியிலிருந்து நீண்டகாலமாக விலக்கப்படுவது, குழந்தைத் திருமணத்தின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகள், ஆப்கானிஸ்தானில் தகுதிவாய்ந்த ஆசிரியைகளின் பற்றாக்குறையையும் மோசமாக்குகின்றன. 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 11,000-க்கும் மேற்பட்ட தகுதிவாய்ந்த ஆசிரியைகள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என யுனெஸ்கோ மதிப்பிடுகிறது.
அவசரகாலக் கல்விக்கான யுனெஸ்கோவின் ஒருங்கிணைப்பாளர் ஹோடா ஜபேரியன், பல ஆசிரியர்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அங்கு தங்கியிருந்த மற்றவர்கள் தொடர்ந்து கற்பிக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறினார்.
“பல ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர், மேலும் கல்வி அமைப்பில் தங்கியிருந்தவர்கள் தொடர்ந்து கற்பிக்க அனுமதிக்கப்படவில்லை,” என்று ஜபேரியன் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

