Monday, September 28, 2026 3:55 pm
தனக்கு ஒரு குழந்தை பிறந்திருப்பதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பான பராமரிப்புச் செலவு கோரும் வழக்கில், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய இலங்கை கிரிக்கெட் வீரர் சமிக கருணாரத்னவைக் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை கருணாரத்ன மறுத்துள்ளார்.
செப்டம்பர் 28 ஆம் திகதி இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது கருணாரத்ன நீதிமன்றத்தில் ஆஜராகாததைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன தஸநாயக்க உத்தரவிட்டார்.
இருப்பினும், கருணாரத்ன தற்போது 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, தேசியப் பணிக்காக ஜப்பானில் உள்ளார்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தேசியப் பணி காரணமாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்ற தகவல் நீதிமன்றத்திற்குச் சரியாகத் தெரிவிக்கப்படாததே, அவர் ஆஜராகாததற்கான பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படக் காரணமாக அமைந்ததாக அறியப்படுகிறது.
இவ்வழக்கு அக்குழந்தைக்கான பராமரிப்புச் செலவு கோருவது தொடர்பானது. அக்குழந்தையின் தந்தை தான் என்பதை கருணாரத்ன மறுத்துள்ளார்.
குழந்தைக்கான பராமரிப்புச் செலவைச் செலுத்துமாறு கருணாரத்னவுக்கு உத்தரவிடக் கோரியே இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு மீண்டும் ஜனவரி 4-ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

