Monday, August 10, 2026 8:54 am
இந்திய நாடாளுமன்றத்தில் இன்று 4 சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றும் சட்டத்தை இன்று லோக்சபாவில் அறிமுகம் செய்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20 ஆம் திகதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் நீட் முறைகேடு விவகாரம், டெல்லி மாணவர் போராட்டத்தின்போது நடந்த தடியடி, அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று 4 சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதன்படி தீர்ப்பாயம் சீரமைப்பு சட்டம், சுரங்கம் கனிம வளங்கள் திருத்த சட்டம், கேரளாவின் பெயரை கேரளம் என மாற்றும் சட்டம் ,கூட்டுறவு வளர்ச்சி தொடர்பான தேசிய சட்டம் ஆகிய சட்டங்கள் இன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. கேரளா – கேரளம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கேரளாவின் பெயரை ‘கேரளா’ என்பதிலிருந்து ‘கேரளம்’ என அதிகாரப்பூர்வமாக மாற்றுவதற்கான கேரளா (பெயர் மாற்றம்) மசோதா 2026-ஐ இன்று மக்களவையில் அறிமுகப்படுத்த உள்ளார். மத்திய அமைச்சரவை கடந்த பெப்ரவரியில் இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டவுடன், மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரண்டு அவைகளிலும், அவையில் கலந்துகொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். நாடாளுமன்றம் மசோதாவை நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றவுடன், அது சட்டமாகும்.

