Monday, October 5, 2026 5:12 pm
ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நாடான ஜப்பான், பெண்களுதைபந்தாட்ட அரையிறுதியில் தென் கொரியாவை வீழ்த்திய போட்டியை, 50,000 பேர் அமரக்கூடிய அரங்கில் 1,000-க்கும் குறைவான பார்வையாளர்களே பார்த்தனர். இது சில போட்டிகள் மீதான ஆர்வத்தை உருவாக்குவதில் உள்ள சவாலை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவிற்காக 10 இலட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளதாக ஐச்சி-நகோயா (Aichi-Nagoya) அமைப்பாளர்கள் செவ்வாய்க்கிழமை அறிவித்த சில மணிநேரங்களிலேயே இந்த நிகழ்வு நடந்தது.
செப்டம்பர் 19 அன்று நடைபெற்ற தொடக்க விழாவின்போது ஆயிரக்கணக்கான இருக்கைகள் காலியாக இருந்ததிலிருந்தே, பார்வையாளர்களின் வருகை குறித்து ஜப்பானிய அமைப்பாளர்கள் தற்காப்பு நிலையில் உள்ளனர். சூறாவளி எச்சரிக்கை காரணமாக மக்கள் வருவதைத் தவிர்த்ததாக அப்போது அதிகாரிகள் தெரிவித்தனர்; மேலும், இந்த வாரம் ஞாயிறு முதல் செவ்வாய் வரை பலத்த மழையும் பெய்தது.
சில போட்டிகள் நல்ல எண்ணிக்கையிலான பார்வையாளர்களுடன் நடைபெற்றாலும், மற்ற போட்டிகள் ரசிகர்களை ஈர்க்கப் போராடி வருகின்றன.
2002 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெற்ற ஷிசுவோகா (Shizuoka) அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் பெண்கள் உதைபந்தாட்ட அரையிறுதிப் போட்டியில், அதிகாரப்பூர்வமாக 564 பார்வையாளர்கள் முன்னிலையில் வட கொரியா சீனாவை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தியது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த நிலையில், பின்னர் நடைபெற்ற போட்டியில், அதே அரங்கில் 998 பேர் முன்னிலையில் ஜப்பான் அணி தென் கொரியாவை அதே 2-0 என்ற கணக்கில் தோற்கடித்தது.
தடகளப் போட்டிகளின் முக்கிய நிகழ்வுகளாகக் கருதப்படும் ஆண்கள், பெண்களுக்கான 100 மீற்ற ர் ஓட்டப் போட்டிகள் காலியான இருக்கைகளுக்கு முன்னால் நடைபெற்றதைத் தொடர்ந்து, டிக்கெட் விற்பனை குறித்து “திருப்தி இல்லை” என்று அமைப்பாளர்கள் ஒப்புக்கொண்டனர்.
“நாங்கள் தொடர்ந்து அரங்குகள் முழுமையாக நிரம்புவதை இலக்காகக் கொள்வோம், டிக்கெட்டுகளை விற்போம், மேலும் டிக்கெட் வாங்கியவர்கள் உண்மையில் நேரில் வருவதை உறுதிசெய்யவும் பணியாற்றுவோம்,” என்று விளையாட்டுப் போட்டிகளின் ஏற்பாட்டுக் குழுவின் பொதுச் செயலாளர் சதோஷி முரேட் (Satoshi Murate), ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனத்தின் கேள்விக்கு பதிலளிக்கும்போது கூறினார்.
செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ஒட்டுமொத்த டிக்கெட் விற்பனை விகிதம் 70 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

