Wednesday, May 27, 2026 12:13 pm
எபோலா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் உகாண்டாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பெங்களூருவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்டால் 2014-ஆம் ஆண்டுக்குப் பின்னர் தெற்காசியாவிலேயே எபோலா தொற்று முதன் முறையாக அடையாளம் காணப்பட்ட நாடாக இந்தியா மாறும்.
உலக சுகாதார ஸ்தாபனத்தால் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பொது சுகாதார அவசரநிலை என அறிவிக்கப்பட்டுள்ள இந்த நோயின் எந்தவொரு பாதிப்பும் இந்தியாவில் இதுவரை பதிவாகவில்லை என அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா கூறிய ஒரு நாள் கழித்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
எபோலா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 28 வயதான உகாண்டா நாட்டவர் உடல் வலியுடன் பெங்களூருவில் அமைந்துள்ள ஒரு வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், பரிசோதனைக்காக அவரது மாதிரிகள் எடுக்கப்பட்டு தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்க நாட்டிலிருந்து பயணம் மேற்கொண்டு அகமதாபாத்திலிருந்து பெங்களூருவை வந்தடைந்த குறித்த பயணியின் பரிசோதனை முடிவுகள் ஓரிரு நாட்களில் வரும் என இந்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்குமாறும் குடிமக்களை இந்தியா வலியுறுத்தியுள்ளது.

