Wednesday, May 20, 2026 3:16 pm
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள புதிய நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை 342 ரூபாயைக் கடந்து பாரிய உயர்வை பதிவு செய்துள்ளது.
மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 332.08 ரூபாயாகவும் அதன் விற்பனை விலை 342.70 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 328.23 ரூபாயாகவும் விற்பனை விலை 338.07 ரூபாயாகவும் காணப்பட்ட நிலையில் ஒரே நாளில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்றுடன் ஒப்பிடுகையில் ஒரே நாளில் டொலரின் மதிப்பு மிகக் கடுமையான உயர்வைச் சந்தித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 330 ரூபாயை கடந்துள்ளமை இலங்கை ரூபாயின் மீது தொடர்ச்சியாக நிலவும் அழுத்தத்தை வெளிப்படுத்துகின்றது.
ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைவது எரிபொருள் மற்றும் வலுசக்தி போன்ற செலவுகளை அதிகரிப்பதோடு இது உள்நாட்டுப் பணவீக்கத்திற்கும் வழிவகுக்கின்றது. அதிக எரிசக்தி விலைகள், நிதிச் செலவுகள், வரிகள் என்பவற்றில் பணவீககம் ஆதிக்கம் செலுத்துவதனால் முதலீடுகள் ஊக்கமிழந்து ஏற்றுமதிகள் பலவீனமடைந்து பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகும்.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து டொலரின் விலை அதிகரிக்கும் போது இலங்கைப் பொருளாதாரம் பல்வேறு நேர்மறை மற்றும் எதிர்மறைத் தாக்கங்களை எதிர்கொள்ள நேரிடும்.
டொலர் மதிப்பு அதிகரிப்பது நாட்டின் சில குறிப்பிட்ட துறைகளுக்கு சாதகமாக அமைகிறது. தேயிலை, ஆடைகள் மற்றும் நவரத்தினங்கள் போன்ற உள்நாட்டுப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தகர்களுக்கு ஏற்றுமதி வருமானம் அதிகரித்து அதிக லாபம் கிடைக்கும்.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பும் டொலர்களுக்கு முன்பை விட அதிகளவிலான இலங்கை ரூபாய் கிடைக்கும். இது அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையில் செலவு செய்வது மலிவாக மாறுவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து சுற்றுலாத்துறை வளர்ச்சி அடைந்து நாட்டின் வருவாய் அதிகரிக்கும். இறக்குமதிப் பொருட்களின் விலை உயர்வதால் மக்கள் உள்நாட்டுப் பொருட்களை நாடத் தொடங்குவர். இது உள்ளூர் உற்பத்தியாளர்களுக்குச் சாதகமாக அமையக்கூடும்.
டொலரின் அதிகரிப்பினால் ஏற்படும் தீமைகள் எனப் பார்க்கும் போது, டொலர் மதிப்பு உயர்வுவானது சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் நாட்டின் பொதுப் பொருளாதாரத்தில் பாரிய சுமையை ஏற்படுத்தும்.
இலங்கையை பொறுத்தவரை இறக்குமதியில் தங்கியுள்ள ஒரு நாடு ஆகும். டொலரின் அதிகரிப்பால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், எரிவாயு , மருந்து மற்றும் உணவுப் பொருட்களின் இறக்குமதிச் செலவு அதிகரிக்கும். இந்த அதிகரிப்பால் உள்நாட்டில் கடுமையான பணவீக்கம் ஏற்படுவதுடன் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் உயர்வைச் சந்திக்கும்.
இலங்கை அரசாங்கம் சர்வதேச அமைப்புகளிடம் பெற்றுள்ள டொலர் கடன்களை செலுத்தும் போது ரூபாய் மதிப்பில் அதிக தொகையைச் செலுத்த வேண்டியேற்படும். இதனால் வெளிநாட்டுக் கடன் சுமை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
போக்குவரத்து, மின்சாரம் மற்றும் அன்றாட நுகர்வுப் பொருட்களின் விலை உயர்வதால் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து அதனை நுகரும் வீதம் பெருமளவில் குறையும். வெளிநாடுகளில் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு மருத்துவச் சேவைகளைப் பெறுவோருக்கான செலவுகள் பல மடங்கு அதிகரிக்கும்.
கடந்த சில வாரங்களாகவே இலங்கை ரூபாய் டொலருக்கு எதிராகச் சற்றே பலவீனமடைந்து வந்துள்ளது என இலங்கை மத்திய வங்கி அறிக்கை தெரிவிக்கின்றது. மே மாத தொடக்கத்தில் 316 ரூபாயாக இருந்த டொலரின் பெறுமதி தற்போது 340 ரூபாயைக் கடந்துள்ளது.
யூரோ ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 383.70 ஆகவும் விற்பனை விலை ரூ. 398.64 ஆகவும் காணப்படுகின்றது. ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 443.60 ஆகவும் விற்பனை விலை ரூ. 460.08 ஆகவும் பதிவாகியுள்ளது. அமெரிக்க டொலரைப் போலவே கடந்த சில நாட்களாக ஸ்ரேலிங் பவுண்ட் மற்றும் யூரோ ஆகிய நாணயங்களுக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியும் சற்றே வீழ்ச்சியடைந்துள்ளது
இந்த நிலைமை தொடரும் பட்சத்தில் இலங்கையை பொறுத்தவரை பணவீக்கம் அதிகரிப்பு நிகழ்வதுடன் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களின் விலை உயர்வடைந்து இலங்கை பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட வாய்ப்பு உருவாகும். இதனால் நாட்டில் தளம்பல் நிலை உருவாகும் வாய்பபு ஏற்படும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

