Tuesday, July 7, 2026 2:56 pm
பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் எடுத்துவரப்பட்ட 120 பந்தய புறாக்களை பறிமுதல் செய்த கியூ பிரிவு பொலிஸார் மதுரையைச் சேர்ந்த இருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து படகில் இலங்கைக்கு பந்தய புறாக்கள் கடத்த இருப்பதாக பொலிஸார் ராமநாதபுரம் ஆய்வாளர் ஜீவ மணிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று நள்ளிரவு முதல் கண்காணித்து வந்தனர்.
இன்று அதிகாலை ராமேஸ்வரம் நோக்கி வந்த கார் ஒன்று சந்தேகத்திற்கு இடமான முறையில் பாம்பன் சாலை பாலத்தில் வெகு நேரம் நின்று கொண்டு இருந்ததை கண்ட பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் சுற்றி வளைத்து காருக்கு அருகே நின்று கொண்டிருந்த இருவரிடம் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த பொலிஸார் காரை திறந்து சோதனை செய்தபோது காருக்குள் 6 இரும்பு கூடுகளில் 120 புறாக்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காருடன் பந்தய புறாக்களை பறிமுதல் செய்த கியூ பிரிவு பொலிஸார் காரில் வந்த இருவரையும் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதனிடையே புறாவுடன் காரை பறிமுதல் செய்த பின் பொலிஸார் பாம்பன் வடக்கு கடற்கரையில் சோதனை செய்ய சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த படகு ஒன்று பொலிஸாரை கண்டதும் அங்கிருந்து தப்பி சென்றதனையடுத்து மரைன் பொலிஸார் உதவியுடன் பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் பிடிபட்ட இருவரிடம் நடத்திய விசாரணையில் பந்தய புறாக்கள் கடல் வழியாக இலங்கைக்கு கடத்த மதுரையில் இருந்து கொண்டு வரப்பட்டது என தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

