Thursday, June 4, 2026 2:03 pm
மேற்கிந்திய தீவுகளை 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி தனது அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் மேற்கிந்திய தீவுகளுக்கான சுற்றுப்பயணத்தின் முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி ஜமெய்காவின் கிங்ஸ்டனில் உள்ள சபீனா பார்க் மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஷாய் ஹோப் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார். முதலில் துடுப்பபாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களம் புகுந்த கமிந்து மென்டிஸ் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த பெதும் நிஸ்ஸங்க மற்றும் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் அணியை வலுவானதொரு நிலைக்கு இட்டுச் சென்றனர். இருவரும் இணைந்து 136 ஓட்டங்களை பெற்றனர்.
அதிரடியாக விளையாடிய குசல் மென்டிஸ் 62 பந்துகளில் 72 ஓட்டங்களைப் பெற்று மத்தியூ போர்டினின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுபுறம் தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க 103 பந்துகளை எதிர்கொண்டு 79 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். பின்னர் களம் புகுந்த பவன் ரத்நாயக்க 24 ஓட்டங்களுடனும் சரித் அசலங்க 45 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்த போதும் இறுதி ஓவர்களில் ஜனித் லியனகே அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களைக் குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். இறுதியில் இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 303 ஓட்டங்களைப் பெற்றது.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில் ஜெய்டன் சீல்ஸ், ரொஸ்டன் சேஸ் மற்றும் மத்தியூ போர்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
304 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கை அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 49.2 ஓவர்களில் 262 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியடைந்தது.
மேற்கிந்தியத் தீவுகள் அணி சார்பில் அதிகபட்சமாக அணியின்தலைவர் ஷாய் ஹோப் 56 ஓட்டங்களையும், ஜஸ்டின் கிரீவ்ஸ் 45 ஓட்டங்களையும் பெற்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அபாரமாகச் செயற்பட்ட வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர 10 ஓவர்கள் பந்துவீசி 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
மஹீஷ் தீக்ஷன 2 விக்கெட்டுகளையும், அசித பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க மற்றும் சரித் அசலங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இலங்கை பந்துவீச்சாளர்களின் கட்டுக்கோப்பான ஆட்டத்திற்கு முன்னால் மேற்கிந்தியத் தீவுகள் அணியால் இலக்கை எட்ட முடியாமல் போனதென்றே சொல்ல வேண்டும்.
இலங்கை அணியின் சார்பில் துஷ்மந்த சமீர 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி நாயகனாகத் திகழ்ந்தார். இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பதும் நிஸ்ஸங்க 79 ஓட்டங்களைப் பெற்று தனது 19ஆவது ஒருநாள் அரைச்சதத்தையும் பூர்த்தி செய்தார். அதேபோன்று அணியின் தலைவர் குசல் மெந்திஸ் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 72 ஓட்டங்களைப் பெற்று தனது 35ஆவது ஒருநாள் அரைச்சதத்தைப் பதிவு செய்தார். போட்டியின் ஆட்டநாயகனாகவும் குசல் மெண்டீஸ் தெரிவானார்.
இந்தப் போட்டி நடைபெற்ற ஜமைக்காவின் சபீனா பார்க் மைதானத்தில் இலங்கை அணி ஒருநாள் போட்டி ஒன்றில் விளையாடுவது 13 வருடங்களுக்குப் பின்னராகும்.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி எதிர்வரும் சனிக்கிழமை கிங்ஸ்டனிலும் மூன்றாவது போட்டி அடுத்த திங்கட்கிழமை சபீனா பார்க்கிலும் நடைபெறும்.
நேற்றைய வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. அடுத்த போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் தொடரைக் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

