Thursday, May 28, 2026 11:59 am
உலகெங்கும் வாழும் இஸ்லாமியர்களால் தியாகத் திருநாளாம் ஈதுல் அல்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் இன்று (28) பக்திப் பெருக்குடனும் , உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு , கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று காலை விசேட பெருநாள் தொழுகையும் , குத்பா பிரசங்கமும் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளன.
இன்று காலை நடைபெற்ற இந்த விசேட பெருநாள் தொழுகையையும் , அதனைத் தொடர்ந்த குத்பா மார்க்கச் சொற்பொழிவினையும் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் இமாம் மௌலவி எஸ்.எம்.றிஸ்வான் (பஹ்ஜி) அவர்கள் முன்னின்று நடாத்தினார்.
அவர் தனது பிரசங்கத்தின் போது , ஹஜ் பெருநாளின் பின்னணியில் உள்ள தியாகத்தின் முக்கியத்துவம் , மனிதநேயம் , சகிப்புத்தன்மை மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் குறித்துப் பேசி , தற்போதைய சூழலில் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
தலைநகரின் முக்கிய ஆன்மீக மையமாக விளங்கும் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்ற இத்தொழுகையில் , கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இருந்து வருகை தந்த ஆண்கள் , பெண்கள் மற்றும் சிறுவர்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
பெண்களுக்கென பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தொழுகை இடங்களிலும் கணிசமானோர் திரண்டிருந்தனர். தொழுகை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பள்ளிவாசல் வளாகத்தில் கூடியிருந்த பொதுமக்கள் ஒருவருக்கொருவர் முகமலர்ச்சியோடு ‘சலாம்’ கூறி, கட்டித்தழுவித் தங்களது பெருநாள் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
இனம், மொழி, அந்தஸ்து எனப் பாகுபாடுகளின்றி அனைவரும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியைக் கொண்டாடிய விதம் அங்கு நெகிழ்ச்சியான ஆன்மீகச் சூழலை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன், நாட்டின் அமைதி, செழிப்பு மற்றும் உலகெங்கிலும் வாழும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் இத்தொழுகையின் போது விசேட பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

