Friday, May 22, 2026 2:57 pm
கொழும்பு , ஜம்பட்டா வீதி 95ஆம் தோட்ட பகுதியில் அண்மையில் வீசிய பலத்த புயல் காற்று (மினி சூறாவளி) காரணமாக கூரைகள் சேதமடைந்த வீடுகள், கொழும்பு மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் முழுமையாகப் புனரமைக்கப்பட்டு இன்றைய தினம் (22) பிரதி மேயரினால் மக்களிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் கொழும்பு மாநகரப் பகுதியில் ஏற்பட்ட திடீர் இயற்கை அனர்த்த நிலைமையினால் , இப்பகுதியில் உள்ள 4 வீடுகளின் கூரைகள் முற்றாக இடிந்து விழுந்து சேதமடைந்திருந்தன. இதனால் அவ்வீடுகளில் வசித்து வந்த 8 குடும்பங்கள் தங்குமிட வசதியின்றி பெரும் அவதிக்குள்ளாகியிருந்தனர்.
இந்த அனர்த்தம் ஏற்படுவதற்கு முன்பாகவே , அப்பகுதியின் ஆபத்தான நிலைமையைக் கண்டறிந்து கொழும்பு பிரதேச செயலாளர் மற்றும் வட கொழும்பு தொகுதி மாநகர சபை உறுப்பினர் சுப்பையா ஆனந்தகுமார் ஆகியோர் மக்களை அந்த வீடுகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியிருந்தனர். இவர்களின் இந்த துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவே பெரும் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களின் அவல நிலை மற்றும் அவர்களின் வேண்டுகோள்களை ஏற்று, தேசிய மக்கள் சக்தியின் வட கொழும்பு தொகுதி மாநகர சபை உறுப்பினர் சுப்பையா ஆனந்தகுமார் அவர்கள் மேற்கொண்ட பெரும் முயற்சியின் காரணமாகவே இத்திட்டம் சாத்தியமானது.
அவர் கொழும்பு மாநகர முதல்வர் (Mayor) மற்றும் பிரதி முதல்வர் (Deputy Mayor) ஆகியோருடன் தொடர்ந்து விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டு , இதற்கான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதில் முன்னின்று உழைத்தார்.
இதனைத் தொடர்ந்து , கொழும்பு மாவட்ட செயலாளர் சந்துருவான் மற்றும் பிரதேச செயலகத்தின் நேரடித் தலையீட்டுடன் , கொழும்பு மாநகர சபையினால் கூரைகளைப் புனரமைப்பதற்காக 20 இலட்சம் ரூபாய் நிதி அவசரமாக ஒதுக்கப்பட்டது.
இந்நிதியைக் கொண்டு அனைத்து வீடுகளினதும் கூரைகள் முழுமையாகப் புனரமைக்கப்பட்டு, அனர்த்தத்திற்கு முகம்கொடுத்த குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் மீளக் குடியேற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராகக் கடமையாற்றிய க்ளேரா பெர்னான்டோ அவர்களின் சிறப்பான ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூரைகள் கையளிப்பு நிகழ்வில் , பிரதி மேயர் , கொழும்பு மாவட்ட செயலாளர் சந்துருவான் , மாநகர சபை உறுப்பினர்களான சுப்பையா ஆனந்தகுமார் , சுதாகரன் , தனுஷினி மற்றும் சம்பந்தப்பட்ட பகுதிக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் (GS) மற்றும் பொலிஸ் நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
அத்துடன் , அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் மக்களுக்கு இந்த அரசு தொடர்ந்தும் தனது அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். மேலும் , இந்த இக்கட்டான காலகட்டத்தில் மக்களுக்கு ஆதரவாக நின்று செயற்பட்ட அதிகாரிகள் , நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இச்சம்பவத்தை வெளிக்கொண்டு வந்து உதவிய ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் இதன்போது நன்றிகள் தெரிவிக்கப்பட்டன

