Wednesday, May 27, 2026 12:24 pm
கடந்த மார்ச் 28 ஆம் திகதி ஆரம்பமான நடப்பு ஐ.பி.எல்.தொடர் கடந்த 24 ஆம் திகதியுடன் அனைத்து லீக் ஆட்டங்களும் முடிவடைந்தன.
நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றன.
பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் 5 முதல் 10 ஆவது இடங்களைப் பிடித்து வெளியேறியுள்ளன.
தர்மசாலாவில் நேற்று நடைபெற்ற குவாலிபையா்-1 ஆட்டத்தில் முதல் இடத்தைப் பிடித்த பெங்களூரும் இரண்டாம் இடத்தைப் பிடித்த குஜராத் அணியும் மோதின.
நேற்றிரவு நடைபெற்ற 19ஆவது ஐபிஎல் அத்தியாயத்தின் முதலாவது தகுதிகாண் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்ட நடப்பு சம்பியன் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தனது அபார வெற்றியை பதிவு செய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அணித் தலைவர் ரஜாத் பட்டிதாரின் அபார துடுப்பாட்டம் க்ருணல் பாண்டியாவின் அற்புதமான சகலதுறை ஆட்டம் ஜேக்கப் டவி, புவ்ணேஷ்வர் குமார், ராசிக் சலாம் ஆகியோரின் துல்லியமான பந்தவீச்சு என்பன றோயல் செலஞ்சர் பெங்களூரு அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றின. குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்களது மோசமான களத்தடுப்பும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு சாதகமாக அமைந்தது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 254 ஓட்டங்களைக் குவித்தது.
ஆரம்ப வீரர் வெங்கடேஸ் ஐயர் 19 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபோது மொத்த எண்ணிக்கை 21 ஓட்டங்களாக இருந்தது. விராத் கோலி 43 ஓட்டங்களும், தேவ்டத் படிக்கல் 30 ஓட்டங்களும் என இருவரும் 2ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நகர்த்தினர்.
அணித் தலைவர் ரஜாத் பட்டிதார், க்ருணல் பாண்டியா ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 45 பந்துகளில் 95 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலைக்கு முன்னேற்றியுள்ளனர். க்ருணல் பாண்டியா 43 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். மறுபக்கத்தில் ரஜாத் பட்டிதார் வெறும் 33 பந்துகளில் 5 பவுண்டறிகள் 9 சிக்ஸ்கள் அடங்கலாக 93 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஜிட்டேஷ் ஷர்மா ஆட்டம் இழக்காமல் 15 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கெகிசோ ரபடா 54 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
255 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 162 ஓட்டங்களைப் பெற்று படுதோல்வி அடைந்தது.
இந்த வருட ஐபிஎல் அத்தியாயத்தில் 600க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்து அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள அதிரடி ஆரம்ப வீரர்களான சாய் சுதர்சன் 14 ஓட்டங்களுடனும் ஷுப்மான் கில் 2 ஓட்டங்கள் என்ற குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பேரிடியாக அமைந்தது.
மொத்த எண்ணிக்கை 51 ஓட்டங்களாக இருந்தபோது ஜொஸ் பட்லர் 29 ஓட்டங்கள், நிஷாந்த் சிந்து 5 ஓட்டங்கள், ஜேசன் ஹோல்டர் 0 ஓட்டம் என மூவரும் 6 பந்துகள் இடைவெளியில் களம் விட்டகன்றதால் குஜராத் டைட்டன்ஸ் அணி மேலும் நிலைகுலைந்தது.
வொஷிங்டன் சுந்தர் 8 ஓட்டங்கள் ராஷித் கான் 8 ஓட்டங்கள் கெகிசோ ரபடா 9 ஓட்டங்கள் என ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் வெளியேறினார்கள். இந் நிலையில் ராகுல் தேவாட்டியா மொஹம்மத் சிராஜுடன் ஜோடி சேர்ந்த 9ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களைப் பகிர்ந்து குஜாரத் டைட்டன்ஸை அணியை ஓரளவு நிலைநாட்டினார். ராகுல் தேவாட்டியா 43 பந்துகளில் 8 பவுண்டறிகள் 4 சிக்ஸ்களுடன் 68 ஓட்டங்களைப் பெற்று 9ஆவதாக ஆட்டம் இழந்தார்.
பந்துவீச்சில் ஜேக்கப் டவி 39 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், க்ருணல் பாண்டியா 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், ராசிக் சலாம் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், புவ்ணேஷ்வர் குமார் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகனாக ரஜாத் பட்டிதார் தெரிவு செய்யப்பட்டார்.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இறுதிப் போட்டிக்கு செல்ல மேலும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. சண்டிகாரில் இன்று நடைபெறவுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கும் இடையிலான நீக்கல் போட்டியில் வெற்றிபெறும் அணியை இரண்டாவது தகுதிகாண் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி நாளை மறுதினம் எதிர்த்தாடும்.
நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி பெற்ற புள்ளிகள் ஐபிஎல் பிளேஆஃப் அல்லது நாக்-அவுட் போட்டியில் எந்தவொரு அணியும் எடுத்த அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை என்ற சாதனையாக அமைந்தது.
ஆர்சிபி இன் 254 /5 என்ற இலக்கு 2023-ல் குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக பதிவு செய்திருந்த முந்தைய அதிகபட்ச ஐபிஎல் பிளேஆஃப் ஓட்ட எண்ணிக்கையான 233/ 3 என்ற இலக்கை முறியடித்துள்ளது.
இந்த இன்னிங்ஸ் உலகளவில் எந்தவொரு டி20 நாக்-அவுட் போட்டியிலும் இதுவரை பதிவு செய்யப்பட்ட நான்காவது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மே 31 அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு ஆர்சிபி அணி தகுதி பெற்றுள்ளது.

