Monday, May 18, 2026 2:15 pm
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கொழும்பு வடக்கு நகர அலுவலகத்தின் ஏற்பாட்டில் , வீடற்ற மற்றும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு நிலையான வீடுகளை அமைத்துக் கொடுக்கும் திட்டம் இன்றைய தினம் கொழும்பு வடக்கு , நவகம்புர வட்டாரத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் நேரடி அனுசரணையுடன், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் பிரம்மாண்டமான வீட்டுத்திட்டத்தின் ஒரு அங்கமாக கொழும்பு பகுதியில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ், கொழும்பு வடக்கு , நவகம்புர பகுதியில் மிகவும் அபாயகரமான நிலையில் வசித்து வந்த முருகையா மாதவன் என்பவரது குடும்பத்திற்கு புதிய வீடொன்றை அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் மற்றும் அடிக்கல் நாட்டும் விழா சுபவேளையில் நடைபெற்றது. இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வானது இந்து மத முறைப்படியான பூமி பூஜையை கொட்டாஞ்சேனை வரதராஜ விநாயகர் ஆலய பிரதம குருக்கள் எஸ். ரவிச்சந்திர குருக்களினால் மிகவும் சிறப்பாக நடாத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கொழும்பு வடக்கு நகர அலுவலகத்தின் சிரேஷ்ட முகாமையாளர் ஆர். எம். சுபசிங்க அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், முருகையா மாதவன் அவர்களின் தற்போதைய வீடு மிகவும் பழுதடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயகரமான நிலையில் இருந்தது என்றும், கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையினால் அவரது குடும்பத்தினரின் வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
இதனைக் கருத்திற்கொண்டு, கௌரவ அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் களப்பரிசோதனையைத் தொடர்ந்து இத்திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ், முருகையா மாதவன் போன்ற தேவையுடைய எளிய மக்களுக்கு நிலையான வீடொன்றை அமைப்பதற்காக அரசாங்கத்தினால் 10 இலட்சம் ரூபாய் (ரூ. 10,00 000) நிதியுதவி நன்கொடையாக வழங்கப்படுகிறது. முற்றிலும் சேதமடைந்த நிலையில் காணப்பட்ட முருகையா மாதவனின் வீட்டினைப் புனரமைப்பதற்காக, வீடமைப்பு அதிகார சபையின் பங்களிப்புடன் இந்த 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலை மற்றும் நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாண்புமிகு பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, நவகம்புர வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஏ.பி. செல்வம், பிரதேச செயலாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமயத் தலைவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் சிறப்பம்சமாக, புதிய வீட்டிற்கான அங்கீகரிக்கப்பட்ட நிதியின் முதற்கட்ட தவணைப் பணம் பிரதி சபாநாயகரால் முருகையா மாதவன் அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், புதிய வீட்டிற்கான அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.
மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த வீட்டின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்து, பயனாளியிடம் கையளிக்க எதிர்பார்ப்பதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளும் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

