Monday, May 25, 2026 12:18 pm
நேற்று வான்கடேவில் நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ். இந்த வெற்றியுடன் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தங்களின் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளன.
போட்டியின் நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 175 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் ராயல்ஸ் அணியின் ஜோஃப்ரா ஆர்ச்சர் 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். பந்துவீச்சின்போது 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக ஜோஃப்ரா ஆர்ச்சர் தெரிவுசெய்யப்பட்டார்.
முன்னணி பேட்டர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனாதனால் 139/6 என்ற நிலையில் தடுமாறியது ராஜஸ்தான் ராயல்ஸ். 8வது வீரராகக் களமிறங்கிய ஜோஃப்ரா ஆர்ச்சர் தன்னுடைய பேட்டிங்கின் மூலம் தன் அணிக்கு நம்பிக்கை கொடுத்தார் என்று கூறலாம். வேகமாக ரன்கள் சேர்த்த ஆர்ச்சர் 15 பந்துகளில் 32 ரன்கள் விளாசினார். இதன் காரணமாக ராயல்ஸ் அணியின் ரன்ரேட் உயர்ந்தது.
பின்னர் ரவீந்திர ஜடேஜா மற்றும் நாந்த்ரே பர்கர் இருவரும் 9வது விக்கெட்டுக்கு 2 ஓவர்களில் 30 ரன்கள் சேர்த்தனர். மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சாளர்களில் அதிகபட்சமாக தீபக் சஹர் மற்றும் ஷார்துல் தாக்கூர் இருவரும் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
206 ரன் இலக்கைத் துரத்தியது மும்பை இந்தியன்ஸ். முதல் ஓவரின் 4வது பந்தில் ரோஹித் ஷர்மாவை டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார் ஜோஃப்ரா ஆர்ச்சர். மூன்றாவது ஓவரில் நமன் தீர் விக்கெட்டையும் ஆர்ச்சர் கைப்பற்றினார். நான்காவது ஓவரில் 12 ரன்கள் எடுத்திருந்த ரியான் ரிக்கில்டனை வெளியேற்றினார் நாந்த்ரே பர்கர். அடுத்ததாக 6வது ஓவரில் திலக் வர்மாவை பெவிலியனுக்கு அனுப்பினார் பிரிஜேஷ் ஷர்மா.
இவ்வாறு தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்த மும்பை இந்தியன்ஸ் பவர்பிளே முடிவில் 49/4 என்ற நிலையில் இருந்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே எடுத்தது மும்பை இந்தியன்ஸ்.
இதன்மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ராஜஸ்தான் ராயல்ஸ்.
ஏற்கெனவே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன.
பிளே ஆஃப் சுற்று நாளை ஆரம்பமாகின்றது. முதல் இரு இடங்களில் உள்ள ஆர்சிபி மற்றும் டைட்டன்ஸ் அணிகள் குவாலிஃபயர் 1 போட்டியில் மோதவிருக்கின்றன. புதன்கிழமை நடக்கும் எலிமினேட்டரில் சன்ரைசர்ஸ் மற்றும் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் ஏற்கனவே ஐ.பி.எல் 2026 பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றன. நேற்று மும்பை இந்தியன்ஸ் அணியை 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதியாக டாப் 4 அணிகளில் ஒன்றாக இணைந்தது.
நேற்று இரவு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழந்து 203 ஓட்டங்களை குவித்தது. துடுப்பாட்டத்தில் டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக கே.எல். ராகுல் 60 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் சவுரப் தூபே 2 விக்கெட்களையும் அனுகுல் ராய், சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
204 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 163 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துடுப்பாட்டத்தில் கொல்கத்தா அணி சார்பில் அதிகபட்சமாக அஜிங்கியா ரஹானே 63 ஓட்டங்களை பெற்றார். பந்து வீச்சில் டெல்லி அணி சார்பில் குல்தீப் யாதவ் மற்றும் நிகிடி 3 விக்கெட்களையும் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களையும் அக்சர் படேல் 1 விக்கெட் வீழ்த்தினர்.

