Thursday, April 30, 2026 3:50 pm
முல்லைத்தீவு – வவுனியா மார்க்கத்தில் பயணிக்கும் தனியார் பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் அறவிடப்படுவதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து, குறித்த பஸ் நடத்துநருக்கு உடனடியாகத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
குறித்த மார்க்கத்தில் பயணிக்கும் சில தனியார் பஸ் நடத்துநர்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் பணத்துக்கு பற்றுச்சீட்டுகளை வழங்குவதில்லை எனவும் மீதிப்பணம் உரிய முறையில் பயணிகளுக்குத் திருப்பியளிக்கப்படுவதில்லை எனவும் அதிகார சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாடு கிடைக்கப்பெற்றதையடுத்து அதிகார சபையால் உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது, சம்பந்தப்பட்ட பஸ் நடத்துநரை விசாரித்ததில் அவர் அதிக கட்டணம் அறவிட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு அமைவாக அவருக்கு உடனடியாகத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் இது குறித்து கடும் எச்சரிக்கையும் விடுகப்பட்டுள்ளது.

