Friday, November 20, 2026 12:51 pm
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ,சீனாவின் ஜி ஜின்பிங்,ரஷ்யாவின் விளாடிமிர் புட்டின் ஆகிய மூன்று வல்லரசு நாடுகளின் தலைவர்களின் சந்திப்பு ஒரு ராஜதந்திர வெற்றியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் மிகக் கடினமான இரு போட்டியாளர்களுடன் ட்ரம்ப்பால் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்திருக்கும்.
சீனாவின் தொழில்நுட்ப மையமான ஷென்செனில் உள்ள ஒரு வில்லாவில் இந்த மூவரும் சந்திப்பதற்கு முன்னதாக, ஜி புட்டின் ஆகிய இருவரும் தனது நண்பர்கள் என்று கூறிய ட்ரம்ப் அவர்களைப் புகழ்ந்து பேசினார். உக்ரைன் ,ஈரான் விவகாரங்கள், அத்துடன் அணு ஆயுதங்களால் ஏற்படும் அபாயங்களைக் குறைப்பது போன்றவை இந்தச் சந்திப்பின் நிகழ்ச்சி நிரலில் இருந்தன.
ஆனால், சுமார் 70 நிமிடங்கள் மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அவர்கள் மிகவும் சுருக்கமான சில விஷயங்களில் மட்டுமே உடன்பாட்டிற்கு வந்தனர். ஐக்கிய நாடுகள் சபையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவது, புதைபடிவ எரிபொருட்களின் உற்பத்தியைச் செம்மைப்படுத்துவது , சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பைக் கட்டுப்படுத்துவது போன்றவை இதில் அடங்கும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்புச் சந்திப்பு என்று விளம்பரப்படுத்தப்பட்ட இந்த நிகழ்வு, இறுதியில் வெறும் புகைப்பட வாய்ப்பாக மட்டுமே முடிந்தது. ட்ரம்ப் அந்த வில்லாவிலிருந்து விரைவாக வெளியேறி, செய்தியாளர்களிடம் எதையும் கூறாமலேயே தனது விமானத்தில் (Air Force One) ஏறினார். இருப்பினும், வாஷிங்டனுக்குத் திரும்பும் வழியில் சமூக ஊடகங்களில் இந்தச் சந்திப்பை “மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது” என்று குறிப்பிட்ட அவர், வெள்ளிக்கிழமையன்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர் சந்திப்பை நடத்தப்போவதாகவும் அறிவித்தார்.
ஷென்சென் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, பேர்லினில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ட்ரம்ப் தொலைபேசி வாயிலாக இணைந்துகொண்டார். அக்கூட்டத்தில் அமெரிக்கத் தூதர்கள் ஜாரெட் குஷ்னர் ,ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோருடன், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ,உக்ரைனின் போர் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் 40-க்கும் மேற்பட்ட ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் கலந்துகொண்டனர். உக்ரைன் போருக்கு அமைதியான தீர்வைக் காண்பது குறித்து ஜியுடனும், புட்டினுடனும் தான் பேசியதாக ட்ரம்ப் அந்தச் சந்திப்பில் தெரிவித்ததாக விட்கோஃப் கூறினார்.
இந்த முத்தரப்புச் சந்திப்பின் முடிவில் எட்டப்பட்ட உடன்படிக்கைகள் மிகச் சிறிய அளவிலானவை, ஆனால் சந்திப்பின் தொடக்கத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துகள் அவ்வாறில்லை.

