Monday, November 9, 2026 2:08 pm
எகிப்திய தலைநகர் கெய்ரோவின் தெற்கே ஞாயிற்றுக்கிழமை இரண்டு இரயில்கள் மோதிக்கொண்டதில் ஏழு பேர் உயிரிழந்தனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தலைமை வழக்கறிஞர் அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ரயிலின் நடத்துனரும் அடங்குவதாக அந்த அறிக்கை மேலும் கூறியது.
கெய்ரோவிலிருந்து சுமார் 52 கிலோமீற்றர் (32 மைல்) தெற்கே உள்ள கிசா மாகாணத்தின் அல்-அய்யாத் மாவட்டத்தில், தென்மேற்கே ஃபாயும் மாகாணத்திற்குச் சென்றுகொண்டிருந்த ஒரு இரயில், தெற்கே அஸ்வான் மாகாணத்திற்குச் சென்றுகொண்டிருந்த மற்றொரு இரயிலின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்து நடந்ததாகப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
எகிப்தில் இரயில்கள் தடம் புரள்வதும் விபத்துக்களும் சர்வ சாதாரணமாக நிகழ்கின்றன. அங்குள்ள அமைப்பு, நீண்ட காலமாகவே தவறான நிர்வாகம்,உபகரணங்களின் மோசமான பராமரிப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், தனது இரயில் அமைப்புகளை மேம்படுத்துவதற்காக அரசாங்கம் நவீனமயமாக்கல் முயற்சிகளை அறிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் சுமார் 80 பேர் அம்புலன்ஸ்கள் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
எகிப்தின் மிக மோசமான ரயில் விபத்து 2002-ல் நிகழ்ந்தது. அப்போது, கெய்ரோவிலிருந்து தெற்கு எகிப்துக்குச் சென்று கொண்டிருந்த இரவு நேர இரயிலில் தீ விபத்து ஏற்பட்டதில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

