Tuesday, September 29, 2026 4:47 pm
பங்களாதேஷின் ரூப்பூர் அணுமின் நிலையத்திற்கான அணுசக்தி எரிபொருளைச் சுமந்து சென்ற ரஷ்ய விமானத்திற்குத் தன் வான்வெளியை பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது. பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்த பங்களாதேஷ் முயன்று வரும் சூழலில், இந்த நடவடிக்கை பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பங்களாதேஷின் முதல் அணுமின் நிலையமான ரூப்பூரின் 2-வது பிரிவிற்கான அணுசக்தி எரிபொருள் செப்டம்பர் 24 அன்று வந்தடைய வேண்டியிருந்தது. அஜர்பைஜான், கஜகஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா வழியாக அந்த விமானம் டாக்கா சென்றடைய திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், கடைசி நேரத்தில் பாகிஸ்தான் வான்வெளி அனுமதி மறுத்ததால் எரிபொருள் விநியோகம் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் காரணங்களாலேயே அனுமதி மறுக்கப்பட்டதாக தாக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் தற்போது அதன் மிக கடுமையான ஆற்றல் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது. பல பகுதிகளில் தினமும் 10 முதல் 16 மணி நேரம் வரை மின்தடை ஏற்பட்டு நாட்டின் தொழில் உற்பத்தியும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து மீளவும், மின்சார உற்பத்தியை பெருக்கவும் ரூப்பூர் திட்டம் மிக முக்கியமானது.
தற்போது அணுசக்தி எரிபொருளை மாற்றுப் பாதையில் அனுப்ப ரஷ்யாவின் ‘ரோசாட்டம்’ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்குள் 7 தனித்தனி விமானங்கள் மூலம் அணுசக்தி எரிபொருள் முழுமையாகக் கொண்டுவரப்பட்டு, மின் உற்பத்தி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

