Wednesday, August 12, 2026 7:33 pm
ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் 14 ஆண்டு சிறை தண்டனையில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இம்ரான் கான் சிறையிலேயே இறந்து இருக்க வாய்ப்புள்ளது என்று மூன்று இராணுவ அதிகாரிகள் கூறியதாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் இம்ரான் கான் இறந்திருக்கலாம் என்று பாகிஸ்தானிய பத்திரிகையாளர் வஜாஹத் சயீத் கான் உறுதிப்படுத்தப்படாத ஒரு தகவலை வெளியிட்டிருப்பது கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது.
எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு, தற்போது அமெரிக்காவில் வசிக்கும் பத்திரிகையாளரான வஜாஹத், ஒரு நேர்காணலில், “இம்ரான் கான் இனி நம்முடன் இல்லை என்று மூன்று மூத்த இராணுவ வட்டாரங்கள் தன்னிடம் கூறியதாக” தெரிவித்துள்ளார்.
வஜாஹத்தின் கூற்றுப்படி, ராவல்பிண்டியில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் பணியாற்றும் இராணுவத்தின் பொதுப் பணியாளர் பிரிவு, இராணுவப் புலனாய்வு மற்றும் சி4ஐ இயக்குநரகங்களின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஒரு இளநிலை ஆணைய அதிகாரியுடன் அவர் நடத்திய உரையாடல்களே அவரது செய்தி வெளியீட்டிற்கு அடிப்படையாக அமைந்தன.
அதுமட்டுமின்றி சில நாட்களாக இம்ரான் கானை பார்க்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இம்ரான் கானை பார்க்க சென்ற அவரது குடும்பம் மற்றும் அவரது பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாஃப் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதுவும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் – இ – இன்சாஃப் கட்சி கொதித்து போய் உள்ளது. அந்த நாட்டின் கைபர் பக்துன்வாவின் முதல்வர் சோஹைல் அப்ரிடி கூறுகையில், ”இம்ரான் கானுக்கு ஏதாவது நடந்திருந்தால் 20 லட்சம் பேர் தெருவில் இறங்கி போராட்டம் நடத்த தயாராக உள்ளனர். பாகிஸ்தான் ராணுவ தளபதி அசீம் முனீரின் செயல்பாட்டால் எங்களின் கோபமான இளைஞர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். உடனடியாக இம்ரான் கான் நலமாக உள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டு, அவரை சந்திக்க குடும்பத்தினருக்கு அனுமதி வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

