Thursday, July 23, 2026 11:00 am
தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக கருதப்பட்ட நிலையில் பலகோடி மக்களின் எதிர்பார்ப்புடன் இன்று ஜனநாயகன் திரைப்படம் வெளிவந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.
ரசிகர்களின் ஆரவாரம், வெடிச்சத்தம், மேளச்சத்தம், கூச்சல் என திரையரங்குகள் விழாக்கோலம் கொண்டுள்ளன. இதற்கு வெறுமனே தளபதியின் படம் என்பது மட்டும் காரணமாக அமையவில்லை. ஜனநாயகன் திரைப்படம் தாண்டிவந்த கசப்பான நிகழ்வுகளும் காரணமாகவுள்ளது எனலாம்.
அதுமட்டுமன்றி பொதுவாக தளபதி விஜய் என்ற டைட்டில் கார்டுடன் வெளியாகும் படம் தற்போது முதல் முறையாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் என்ற டைட்டில் கார்டுடன் வெளியாகியுள்ளது. இதற்காகவே பல கோடி ரசிகர்கள் இந்தப் படத்தினை காண வருகின்றனர்.
பொதுவாகவே விஜய் படம் என்றால் ரசிகர்கள் அதிகாலை முதலே திரையரங்குகள் முன்பாக கொண்டாட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். அதிலும் இப்படம் விஜய்யின் கடைசி படம். கடந்த இரு தினங்களாகவே திரையரங்குகள் முன்பாக பேனர் அமைத்தல் தோரணம் உருவாக்குதல் உள்ளிட்டப் பணிகளில் ரசிகர்கள் ஈடுபட்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக இன்று அதிகாலை முதல் திரையரங்குகள் முன்பாக ரசிகர்கள் பேண்டு வாத்தியங்கள் முழங்க கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
படத்தின் வெளியீட்டை முன்னிட்டு விஜய் ரசிகர்களும் தமிழக வெற்றி கழக தொண்டர்களும் திரையரங்குகளில் சிறப்பான கொண்டாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். பல இடங்களில் பேனர்கள் கட்-அவுட்கள் உள்ளிட்ட பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விஜய்யின் இறுதிப் படம் இதுவென்பதால் உலகளவில் 3500க்கும் மேற்பட்ட திரைகளில் படம் வெளியாகுகின்றது. பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
வெங்கட்பிரபுவின் கோட்(goat) படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் அவரது கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்தை எச். வினோத் இயக்குகிறார். கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு 2024 ஒக்டோபரில் தொடங்கியது.
டிசம்பர் 27 ஆம் திகதி மலேசியாவில் 1 இலட்சம் இரசிகர்கள் பங்கேற்ற பிரமாண்ட பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இது லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது. இப்படத்தின் ‘தளபதி கச்சேரி’ ‘ஒரு பேரே வரலாறு’ பாடல்கள் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.
2026 ஜனவரி 9 பொங்கல் வெளியீடாகத் திட்டமிடப்பட்ட நிலையில் தணிக்கைக் குழுவின் ஆட்சேபனையால் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை நாடியும் மேல்முறையீடுகள் காரணமாக படம் திட்டமிட்டபடி ஜனவரியில் வெளியாகவில்லை.பெப்ரவரியில் வழக்கு வாபஸ் பெறப்பட்டு மீண்டும் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது.
மார்ச் மாதத்தில் தணிக்கைக் குழுவினர் படத்தை ஆய்வு செய்தபோது தமிழக தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் தேர்தல் ஆணைய அனுமதி தேவை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் தேர்தல் முடிந்த பிறகு படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் ஒப்புக்கொண்டது.
ஜனநாயகன் படத்துக்கு முறைப்படி சான்றிதழ் கிடைக்காத நிலை நீடித்த நிலையில் ஏப்ரல் 9-ஆம் தேதி ஜனநாயகன் படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தாலும் கூட தொடர்ந்தும் ஜனநாயகன் படத்திற்கான மவுசு குறையவில்லை என்றே சொல்ல வேண்டும்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கே இத்திரைப்படம் வெளியாக வேண்டியிருந்தது. ஆனால் தணிக்கை சிக்கல்கள் காரணமாக தள்ளிப்போனது. மத்திய தணிக்கை திணைக்களம் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியதை அடுத்து இன்று படம் உலகமெங்கும் வெளியாகியுள்ளது. சென்சார் போர்ட் பிரச்சினை இணையத்தில் படம் கசிவு உள்ளிட்ட பல்வேறு தடைகளைத் தாண்டி இறுதியாக இத்திரைப்படம் இந்தியா தவிர 30 நாடுகளில் 8000 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
விஜய் நடிப்பில் பகவதி படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 24 ஆண்டுகள் கழித்து ஜனநாயகன் படம் ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. “A” சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் 18 வயதுக்கும் குறைவானவர்கள் படத்தை பார்ப்பது சட்டப்படி குற்றம். இதனால் குழந்தைகள் 18 வயதுக்கு உட்பட்டோர் திரையரங்குகளுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெற்றோர்களுடன் வந்தாலும் குழந்தைகளுக்கு திரையரங்குக்குள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு குறைவானர்கள் படத்தை பார்க்க முடியாது. அதுவும் 5 முதல் 10 சதவீத வசூலை பாதிக்கும்.
பல தடைகள் ஏற்பட்டாலும் அதனைத் தாண்டி இன்று வெளியாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை கொண்டுவரும் என்பதுடன் தாமதமாக வெளிவந்தாலும் கூட வழமையான விஜய் படங்களின் சாதனையைப் போன்று இந்தத் திரைப்படமும் பெரியளவில் சாதனையை நிகழ்த்தும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.

