Friday, July 3, 2026 1:49 pm
முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வரான சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் ஹொரணை தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவர் இன்று (3) மீண்டும் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு விசாரணைகள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று மீண்டும் அழைக்கப்படவுள்ளது. அந்த வழக்கில் ஆஜர்படுத்துவதற்காகவே, குறித்த மூவரும் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரான நந்துன் சிந்தக்க விக்ரமரத்ன எனப்படும் ‘ஹரக் கட்டா’ மடகஸ்கரில் கைது செய்யப்பட்டதன் பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், அன்றைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வர் ரகித ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரணை தொகுதி அமைப்பாளராகச் செயற்பட்ட சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவர் டுபாய் சென்றுள்ளனர்.
அவர்கள் ஒரே விமானத்தில் டுபாய் சென்று, அங்கு ஹரக் கட்டாவின் மனைவியான மதுஷிகா மதுவந்தி மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான மிதிகம ருவன் என்பவரைச் சந்தித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது, ஹரக் கட்டா பொலிஸாரினால் படுகொலை செய்யப்படுவதைத் தடுப்பது, தடுப்புக் காவல் உத்தரவை நீக்குவது, பூசா அதிஉயர் பாதுகாப்பு சிறைச்சாலையைத் தவிர்த்து வேறு சிறைச்சாலைக்கு மாற்றுவது மற்றும் விசாரணை நடவடிக்கைகளில் இருந்து விடுவிப்பது ஆகியவற்றுக்குத் தேவையானப் பணிகளைச் செய்து தருவதாகக் கூறி, 50 கோடி ரூபாய் இலஞ்சப் பணம் கோரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
பின்னர், அந்தத் தொகை 20 கோடி ரூபாவாகக் குறைக்கப்பட்டு, முன்பணமாக முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் பணமும், பின்னர் மேலும் 2 கோடி ரூபாய் பணமும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை விசாரணைகளில் வெளிப்பட்டுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுக்களின் கீழ் இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் அண்மையில் கைது செய்யப்பட்ட இந்த மூன்று சந்தேகநபர்களும், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் இன்று வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

