Sunday, June 28, 2026 7:35 pm
வெனிசுலாவைத் தாக்கிய இரட்டை நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,430 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் உயர்மட்ட அரசியல்வாதிகளில் ஒருவரான ஜார்ஜ் ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தப் பேரிடரால் மேலும் 3,200 பேர் காயமடைந்ததாகவும், 3,100 பேர் வீடுகளை இழந்ததாகவும் தேசிய சட்டமன்றத் தலைவர் அரசு தொலைக்காட்சியில் பேசுகையில் மேலும் தெரிவித்தார்.
புதன்கிழமை மாலை ஒரு நிமிட இடைவெளியில் ஏற்பட்ட 7.2 , 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் நாட்டின் வடக்குப் பகுதியில் கட்டிடங்களைத் தரைமட்டமாக்கியதைத் தொடர்ந்து, உயிர் பிழைத்தவர்களை மீட்புக் குழுவினர் இன்னும் தேடி வருகின்றனர் . குறைந்தது 68,900 பேர் காணாமல் போனதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான லா குவைராவில், பல பொதுமக்கள் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளை அகற்றுவதற்காக, மண்வெட்டிகளையும் வெறும் கைகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.
இறந்தவர்களில் வெளிநாட்டினர் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில், போர்த்துகீசிய குடியுரிமை அல்லது வம்சாவளியைச் சேர்ந்த 15 பேர், ஏழு சீனர்கள், இரண்டு பிரேசிலியர்கள், ஐந்து ஸ்பானியர்கள், ஒரு இத்தாலிய-வெனிசுவேலர் ஆகியோர் அடங்குவதாகக் கூறப்படுகிறது.

