Tuesday, June 23, 2026 10:09 am
கிளிநொச்சி தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து இரண்டு வயதுடைய பெண் குழந்தை ஒன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை (22) இடம்பெற்றுள்ளது.
பிரமந்தனாறு ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த அறிவரசன் டினுசியா என்ற இரண்டு வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நேற்று மதியம் குறித்த குழந்தையை அழைத்துக்கொண்டு குழந்தையின் தாய் அருகில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார். தனது கணவருக்கு மதிய உணவு வழங்குவதற்காக அயலவர் வீட்டிலேயே குழந்தையை விளையாட விட்டுவிட்டு தாய் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை காணாததால் பதற்றமடைந்த அயலவர்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாகத் தேடிய போதே குறித்த வீட்டிலிருந்த பாதுகாப்பற்ற கிணறு ஒன்றினுள் விழுந்த நிலையில் குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கிணற்றிலிருந்து குழந்தை மீட்கப்பட்டு தருமபுரம் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது குழந்தை உயிரிழந்துவிட்டது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனை மற்றும் மேலதிக விசாரணைகளுக்காகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் குறித்து தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

