Wednesday, June 10, 2026 11:39 am
தமிழ் சினிமாவிலிருந்து பிரித்து பார்க்க முடியாத ஒருவராக இயக்குனர்களின் இமயம் என அழைக்கப்படும் பாரதி ராஜா திகழ்ந்தார். என் இனிய தமிழ் மக்களே என்ற வார்த்தைக்கு உரித்துடையவர் பாரதிராஜா என்றே சொல்ல வேண்டும்.
தனது ஆற்றலால் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்ட பாரதிராஜாவின் குரல் இன்று ஓய்ந்து விட்டது. தமிழ் திரையுலகின் போக்கையே மாற்றி தனித்தடம் ஒன்றை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நல குறைவு காரணமாக இன்று காலமானார்.
84 வயதாகும் இயக்குநர் பாரதிராஜா அண்மைக்காலமாக வயது மூப்பின் காரணமாகவும், உடல் நலக்குறைவு காரணமாகவும் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் காலமானார்.
கடந்த ஆண்டு அவரது ஒரே மகனான நடிகரும் இயக்குநருமான மனோஜ் உயிரிழந்ததனால் ஏற்பட்ட மனஅதிர்ச்சியில் இருந்து மீளாத பாரதிராஜா உடல் நலம் பாதிக்கப்பட்டார். மனோஜின் மரணம் மற்றும் இறுதிச் சடங்குகளின்போது வெளியான காட்சிகள் அந்த இழப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் நிலைகுலைந்து தவித்த பாரதிராஜாவின் நிலையை வெளிக்காட்டியிருந்தன.
1977 ஆம் ஆண்டு 16 வயதினிலே என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக பாரதிராஜா அறிமுகமானார். 16 வயதினிலே படம் பெரும் வெற்றிப் படமாக அமைந்து வசூலில் சாதனை படைத்தது. முதல் படத்திலேயே சிறந்த இயக்குநருக்கான தமிழக அரசின் விருது பெற்றார்.
கிராமிய பின்னணியில் பல வெற்றி படங்களை உருவாக்கி தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கினார். பதினாறு வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, கருத்தம்மா, கிழக்குச் சீமையிலே என ஏராளமான படைப்புகள் அவருடைய இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களாகும்.
சினிமாத் துறைக்கு பாராதிராஜா ஆற்றிய பெரும் பங்கிற்கும் அவருடைய கலை சேவையை பாராட்டியும் இந்திய அரசு வழங்கும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது- 2004 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. இதுதவிர பல தேசிய மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
ஸ்டூடியோவுக்குள் முடங்கிக் கிடந்த கேமராவை கிராமத்து வயல்வெளிகளுக்கும் மண் வாசனைக்கும் கொண்டு சேர்த்த பெருமை பாரதிராஜாவையே சேரும். அதுமட்டுமன்றி பல முன்னணி நட்சத்திரங்களையும், இயக்குநர்களையும் அறிமுகப்படுத்தினார். பல்வேறு திரைப்படங்களில் சிறந்த குணச்சித்திர நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தினார்.
40 படங்களுக்கு மேல் இயக்கி நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இயக்குனர் இமயம் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். பல கிராமப் பின்னணியில் அமைந்த கதைகளை இயக்கி மாபெரும் வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவுக்கு வழங்கியவர் பாரதிராஜா என்று கூறலாம்.
பாரதிராஜாவின் இழப்பைக் குறித்து தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் “சங்கத்தின் முன்னாள் தலைவரும் மூத்த உறுப்பினர்களில் ஒருவருமான இயக்குநர் இமயம் பாரதிராஜா இன்று அதிகாலை காலமாகிவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்” என அறிவித்துள்ளது. திரைத்துரையினர் பலரும் பாரதிராஜாவின் இழப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கதாநாயகன் என்றால் அழகானவன் என்ற பார்வையாளர்களின் மனநிலையை மாற்றியவர். பாசத்துக்குரிய உங்கள் பாரதிராஜா பேசுகிறேன் என தன் குரலால் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இவர்.
கல்லுக்குள் ஈரம்” என்ற திரைப்படத்தின் மூலம் முழு நீளப் படத்தில் நடித்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இயக்குனர் மணிரத்னத்தின் “ஆய்த எழுத்து” திரைப்படத்திலும் “பாண்டிய நாடு” “குரங்கு பொம்மை” “எங்க வீட்டுப் பிள்ளை” “திருச்சிற்றம்பலம்” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அனைத்து தலைமுறைக்குமான ரசிகர்களை தன்வசப்படுத்தினார்.
இவர் இயக்கிய ‘சீதாகொகா சிலுகா’ திரைப்படத்திற்காக 1981-ஆம் ஆண்டு ஆந்திரபிரதேச அரசிடம் இருந்து “நந்தி விருதையும் பெற்றார்.
பாராதிராஜாவின் இழப்பு வெறுமனே ஒரு குடும்பத்தின் இழப்பு மட்டுமல்ல. முழுத்திரையுலகையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திரைப்பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் நேரில் சென்று தமது அஞ்சலியை செலுத்தியிருந்தார்.
புதிய புதிய தொழில் நுட்பங்களால் சினிமாத்துறை தற்போது காணப்பட்டாலும் இங்கு வராத ஈர்ப்பை அன்றைய காலத்திலேயே பார்வையாளர்களுக்கு கொடுத்தவர் பாராதிராஜா.
தமிழ் சினிமாத்துறையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்த பாராதிராஜாவை என்றுமே சினிமா உலகமும் ரசிகர்களும் மறந்துவிடாது என்பதே நிதர்சனமான உண்மை.

