Thursday, June 4, 2026 3:02 pm
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சொல்லிசை கலைஞர் சங்கீதனை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் பார்வையிட்டுள்ளனர்.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணியும் கொள்கைபரப்பு செயலாளருமான நடராஜர் காண்டீபன் இன்று காலை யாழ். சிறைச்சாலையில் அவரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் ஆலய திருவிழாவை முன்னிட்டு விசேட இசை நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. இதன்போது கிளிநொச்சியை சேர்ந்த சொல்லிசை கலைஞரான இளைஞன் ஒருவர் பக்தி மற்றும் தென்னிந்தியப் பாடல்கள் பாடியுள்ளார். தான் இசை நிகழ்வில் பாடிய குறித்த பாடல் காணொளிகளுக்கு ஏற்கனவே தனது இசைச் சேகரிப்பில் பாடிய சொல்லிசை எழுச்சி பாடலை இணைத்து அதனை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
பகிரப்பட்ட பாடல்கள் சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து தென்னிலங்கையிலிருந்து கடுமையான விமர்சனங்களும் இனவாத கருத்துக்களும் முன்வைக்கப்பட்டது.
இந்தநிலையில் குறித்த காணொளி தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் குறித்த இளைஞன் விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கம் செய்கிறார் என தெரிவித்து கைது செய்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து சாவகச்சேரிப் பொலிஸார் இளைஞனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது சந்தேகநபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

