Wednesday, June 3, 2026 10:26 am
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் திங்கட்கிழமை (01) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் நாளான நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (02) 8 என்புகூடுகள் அடையாளம் காணப்பட்டு, 5 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான நிலையில், மே மதம் 09ஆம் திகதி சனிக்கிழமை வரையில் 12 நாட்கள் அகழ்வு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்றன. அந்நிலையில், 09ஆம் திகதியுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. அதன் போது கழுத்து பகுதியில் காசு வடிவிலான தாயத்துடன் ஒரு என்பு கூடு அடையாளம் காணப்பட்ட நிலையில் அது முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதைகுழி பகுதிக்குள் செத்தல் தேங்காய் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமையுடன் 14 நாட்கள் நடைபெற்று 30 என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் , அவற்றில்27 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் இ புதைகுழிக்குள் இருந்து மூக்குத்தி , நாணய குற்றிகள் , ஆணிகள் , மஞ்சள் நிற வளையல் துண்டு மற்றும் காசு வடிவிலான தாயத்து உள்ளடங்கலாக 18 பிற பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
செம்மணி புதைகுழிக்குள் இருந்து இதுவரையிலான கால பகுதியில் 270 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 267 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

