Friday, May 29, 2026 8:08 pm
வாஷிங்டனுக்கும், டெஹ்ரானுக்கும் இடையேயான தற்போதைய பேச்சுவார்த்தையில் மிகவும் சர்ச்சைக்குரிய புள்ளியாக ஈரானின் யுரேனியம் இருப்பு உருவெடுத்துள்ளதாக சி என் என் தெரிவித்துள்ளது.
ஈரானிடம் தற்போது 60 சதவீத தூய்மையுடன் செறிவூட்டப்பட்ட சுமார் 970 பவுண்ட் (கிட்டத்தட்ட 440 கிலோ) எடையுள்ள அதிபயங்கர யுரேனியம் இருப்பு உள்ளது. ஈரானிடம் உள்ள இந்த “அணு துகளை” (Nuclear Dust) முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்பதில் ட்ரம்ப் தொடர்ந்து பிடிவாதமாக உள்ளார். ஆனால், ஈரான் அதிகாரிகளோ, இந்த யுரேனியத்தை தங்கள் நாட்டு மக்களின் தேவைகளுக்கான பொது அணுசக்தித் திட்டத்தில் (Civilian Nuclear Programme) பயன்படுத்துவதற்கு முழுமையான மற்றும் சட்டப்பூர்வமான உரிமை உள்ளது என்று கூறி அமெரிக்காவின் நிபந்தனையை திட்டவட்டமாக மறுத்து வருகின்றனர்.
இந்த யுரேனியத்தை வைத்து ஈரான் எப்போது வேண்டுமானாலும் அணு ஆயுதத்தை உருவாக்கக்கூடும் என்ற அச்சம் சர்வதேச நாடுகளிடம் உள்ளது.
அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்குக் குறைந்தபட்சம் 90 சதவீத தூய்மையுடன் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவைப்படுகிறது. ஈரானிடம் தற்போதுள்ள 60 சதவீத தூய்மையுள்ள யுரேனியம் என்பது தொழில்நுட்ப ரீதியாக ஆயுதக் தரத்திற்குக் கீழ் மட்டத்தில் இருந்தாலும், ஈரானிடம் தற்போது பயன்பாட்டில் உள்ள செறிவூட்டும் அணு உலை வசதிகள் (Enrichment Facility) இருப்பதால், ஈரான் அரசு நினைத்தால் போதும் தற்போதைய 60 சதவீத செறிவூட்டப்பட்ட யுரேனிய இருப்பை வெறும் சில நாட்களிலோ அல்லது வாரங்களிலோ 90 சதவீத ஆயுதத் தரத்திற்கு அவர்களால் எளிதாக மாற்ற முடியும் என்று அணுசக்தி நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சர்வதேச அணுசக்தி ஆய்வாளர்களின் முந்தைய கணிப்புகளின்படி, ஈரானிடம் தற்போது கையிருப்பில் உள்ள இந்த உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அடுத்தகட்டமாகச் சுத்திகரிப்புச் செய்தால், அதனைக் கொண்டு 10 அணு ஆயுதங்களை (Nuclear Weapons) உருவாக்க முடியும் என கணித்துள்ளனர். டொனால்ட் டிரம்பின் முந்தைய ஆட்சிக்காலத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் அணு ஆயுதப் பரவல் தடுப்புப் பிரிவைக் கண்காணித்தவரும், பாதுகாப்பு உளவுத்துறை அமைப்பின் ஈரான் உளவுப்பிரிவு முன்னாள் தலைவருமான எரிக் புரூவர் (Eric Brewer) இது குறித்துப் பேசுகையில், இந்த உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை முழுமையாக அகற்றும் நிபந்தனை இடம்பெறாத எந்தவொரு ஒப்பந்தத்தையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

