Friday, May 22, 2026 2:58 pm
கொங்கோ நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் விமானத்தில் பயணித்த காரணத்தினால் ‘ஏர் பிரான்ஸ்’ (Air France) விமானம் அமெரிக்காவில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டு அவசரமாகக் கனடாவுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் எபோலா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் கொங்கோ நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் இருந்த காரணத்தினாலே ‘ஏர் பிரான்ஸ்’ (Air France) விமானம் அமெரிக்காவில் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டு அவசரமாகக் கனடாவுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது.
கொங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 140க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு கொங்கோ உள்ளிட்ட சில ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் பயணிகளுக்கு அந்நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கொங்கோவைச் சேர்ந்தவர்களோ அல்லது அமெரிக்கக் குடியுரிமை பெற்ற கொங்கோ நாட்டினரோ அமெரிக்காவிற்குள் நுழைய வேண்டுமென்றால் அவர்கள் கண்டிப்பாக வாஷிங்டன் விமான நிலையம் வழியாக மட்டுமே அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அங்கு அவர்களுக்குப் பிரத்யேக மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதே இதற்கு முக்கிய காரணமாகும்.
இந்தநிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அமெரிக்காவின் மிச்சிகன் (Michigan) மாகாணம் நோக்கி புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானத்தில் கொங்கோ நாட்டைச் சேர்ந்த பயணி இருப்பது கண்டறியப்பட்டு மிச்சிகன் விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
ஏர் பிரான்ஸ் விமானம் கனடாவுக்குத் திருப்பி விடப்பட்டு மாண்ட்ரியல் (Montreal) நகரில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. கொங்கோ பயணி தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
விமானத்தில் இருந்த ஏனைய 100-க்கும் மேற்பட்ட பயணிகள் அதே ஏர் பிரான்ஸ் விமானம் மூலம் கனடாவிலிருந்து அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திற்குப் அனுப்பப்பட்டுள்ளனர்.

