Friday, May 22, 2026 10:38 am
நமது பாரம்பரிய கலை மரபின் அடையாளமான கூத்துக் கலைஞர்களின் வாழ்வியலையும், அவர்களின் திரைக்குப் பின்னாலுள்ள எதார்த்தப் போராட்டங்களையும் உலகத் தரத்தில் பேசும் ‘கூத்தாடி’ திரைப்படம், வரும் மே மாதம் 28ஆம் தேதி முதல் இலங்கை முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
அவுஸ்ரேலியாவில் வசிக்கும் ஈழத்தமிழரான செல்வின் தாஸ், இப்படத்தைத் தயாரித்துள்ளதுடன், முதன்முறையாகக் கதையின் நாயகனாகவும் களமிறங்கியுள்ளார்.
கலை மீதான தனது தீராத காதலால், இப்படத்தில் 12 வெவ்வேறு வேடங்களில் அவர் நடித்துள்ளார். குறிப்பாக, 35 கிலோ எடையுள்ள ‘இரணியன்’ வேடத்தை அணிந்துகொண்டு, பல மணிநேரம் அயராது அவர் வழங்கிய அசாத்திய நடிப்பு மற்றும் அர்ப்பணிப்பு, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை ரசிகர்களிடையே பல மடங்கு உயர்த்தியுள்ளது.
கூத்துக் கலைஞர்களின் வாழ்வாதாரப் போராட்டங்கள், வறுமையின் பிடி, மற்றும் அனைத்து தடைகளையும் தாண்டி கலைக்காக அவர்கள் வாழும் வாழ்க்கை என யதார்த்தத்தின் உச்சமாக இப்படம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஈழத்து மண்ணின் கலைப் பெருமையை உலகறியச் செய்யும் நோக்கில் இப்படைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் கவாஸ்கர் காளியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்டப் படைப்புக்கு பிரதாப் கண்ணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களின் மனதைக் கொள்ளைகொண்டுள்ள நிலையில், திரையரங்குகளில் ஒலிக்கப்போகும் பின்னணி இசை ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான சிலிர்ப்பூட்டும் அனுபவத்தைத் தரும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஒரு இலங்கைத் தமிழனின் கடுமையான உழைப்பிலும், கூட்டு முயற்சியிலும் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு படைப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை.
நீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘கூத்தாடி’ திரைப்படம் மே 28 முதல் உங்கள் அருகில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளதால், ரசிகர்கள் தங்களது பேராதரவை வழங்கி இக்கலைப்பயணத்தை வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

