Tuesday, September 1, 2026 12:22 pm
நேபாள-திபெத் எல்லைப் பகுதிகளைப் பேரழிவுகரமான வெள்ளம் நாசமாக்கியதைத் தொடர்ந்து, இன்னும் காணாமல் போன அவுஸ்திரேலியர்களில் இலங்கை வம்சாவளி அவுஸ்திரேலிய தம்பதியும் அவர்களது இரண்டு இளம் மகன்களும் அடங்குவதாக அவுஸ்திரேலிய ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
47 வயதான சந்திரசேகரன் முரளிதரன், அவரது மனைவி 42 வயதான ஷைலஜா முரளிதரன், அவர்களது மகன்களான 14 வயதான அஸ்வின் ,1 வயதான ஆருஷ் ஆகியோர் ஹிமாலயன் கிளேசியர் அட்வென்ச்சர்ஸ் குழுவுடன் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இந்தக் குடும்பம் வடமேற்கு சிட்னியில் வசித்து வருகிறது. இலங்கை , அவுஸ்திரேலிய ஊடகங்களின் செய்திகளின்படி, சந்திரசேகரன் யாழ்ப்பாணத்தில் உள்ள கோப்பாயைச் சேர்ந்தவர். அவரும் அவரது மனைவியும் ஆவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்த முதல் தலைமுறை இலங்கையர்கள் ஆவர். அவர்களுடைய இரண்டு மகன்களும் அவுஸ்திரேலிய தமிழ் புலம்பெயர் சமூகத்தில் பிறந்தவர்கள்.
ஓகஸ்ட் 26 ஆம் திகதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, அந்தக் குடும்பம் கைலாச மலைப் பகுதிக்கு புனித யாத்திரை சென்றிருந்தது.பேரழிவு ஏற்பட்ட அன்று காலையில்தான் அந்தக் குடும்பத்துடன் தங்களுக்குக் கடைசித் தொடர்பு ஏற்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். குடிவரவு நடைமுறைகளுக்காக எல்லையை நோக்கிப் பயணிப்பதற்கு முன்பு அவர்கள் காலை உணவு அருந்தத் தயாராகிக் கொண்டிருந்ததாக ஏபிசி நியூஸ் செய்தி வெளியிட்டது.
முரளிதரன் குடும்பத்தினர், 15 அவுஸ்திரேலியர்கள் அடங்கிய ஒரு சுற்றுலா குழுவுடன் பயணம் செய்து கொண்டிருந்தனர். பேரழிவு ஏற்பட்டபோது, அக்குழுவினர் நேபாள-சீன எல்லைக்கு அருகிலுள்ள ரசுவாகதி அருகே இருந்ததாக நம்பப்படுகிறது.

