Tuesday, May 5, 2026 10:12 am
மன்னார் மூர்வீதி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக தனது கணவனை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசலகூட குழியில் போட்ட நிலையில் குறித்த சடலம் நேற்று திங்கட்கிழமை (4) மன்னார் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில் ,
மன்னார் மூர்வீதியில் வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த கணவன் மனைவிக்கு இடையில் கடந்த சனிக்கிழமை இரவு ஏற்பட்ட தர்க்கம் காரணமாக மனைவி தனது கணவனை தாக்கி கொலை செய்து சடலத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) துண்டு துண்டுகளாக வெட்டி உறப்பையில் போட்டு மலசல கூட குழியினுள் போட்டுள்ளார். பின் மன்னார் பொலிஸ் நிலையத்தில் குறித்த பெண் சரணடைந்துள்ளார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டதோடு மன்னார் நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோருக்கு தெரியப் படுத்தி, கொலையை செய்த குறித்த பெண்ணையும் அழைத்து வந்தனர். நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோர் வருகை தந்த நிலையில் சடலம் மலசலகூட குழியில் இருந்து மீட்கப்பட்டது.
உயிரிழந்தவர் மன்னார் வங்காலை பகுதியை சேர்ந்த 36 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, கொலை செய்த அவரது மனைவி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த வீட்டில் உள்ள உடமைகள் அனைத்தும் குறித்த பெண்ணை உரிமை கோரிய அவரின் தந்தையிடம் ஒப்படைக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

