Sunday, May 3, 2026 5:42 pm
ஐபிஎல் 2026 தொடரின் 44-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
சேப்பாக்கம் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற மும்பை முதலில் துடுப்ப்பாட்டம் செய்தது.
முதலில் இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் வில் ஜாக்ஸ் (1) ஏமாற்றமளித்தாலும், ரையான் ரிக்கெல்டன் (37) , நமன் தீர் (57) ஜோடி அணியை மீட்டெடுக்கப் போராடியது. சூரியகுமார் யாதவ் 21 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, மற்ற நட்சத்திர வீரர்களான திலக் வர்மா 8, கேப்டன் ஹர்திக் பாண்டியா 18 ஓட்டங்களுடன் வெளியேறினர்.
மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெற்களை இழந்து 159 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. சென்னை தரப்பில் அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டுகளையும், நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
160 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்குத் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் (11) விரைவில் வெளியேறினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கப்டன் ருதுராஜ் கெய்க்வாட் , இம்பாக்ட் பிளேயராக வந்த கார்த்திக் சர்மா ஜோடி அதிரடியாக விளையாடி வெற்றியை எளிதாக்கியது. ருதுராஜ் 48 பந்துகளில் 67 ஓட்டங்களும் (5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), கார்த்திக் சர்மா 40 பந்துகளில் 54 ஓட்டங்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்
சென்னை அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெற்களை இழந்து 160 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தைத் தக்கவைத்து தனது பிளே-ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது.
அதேசமயம், தொடர் தோல்விகளால் மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புக்காக ரன் ரேட்டையும், மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி முடிவுகளையும் பெரிதும் சார்ந்திருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக எம்.எஸ். தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

