Wednesday, April 29, 2026 3:25 pm
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் உள்ள தாயிப் நகர் கடற்கரையில் சட்டவிரோதமான முறையில் கடல்அட்டை பிடிப்பில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை (29.04.2026) அதிகாலை வாகரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட கூட்டுச் சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் சீனக்குடா, கிண்ணியா மற்றும் தோப்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, டிங்கி படகு பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் லொறி ஒன்றும், வெளிப்புற படகு இயந்திரம் (40HP) ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் சுமார் 70 கடலட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட அனைத்துப் பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மூதூர் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

