Sunday, April 19, 2026 9:11 pm
அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக இலங்கை விமானப்படை ஈடுபடுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 17 முதல் இந்த நடவடிக்கைகளுக்கான பொறுப்பு அதிகாரப்பூர்வமாக விமானப்படைக்கு வழங்கப்பட்டதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் நலின் வெவக்கும்புர தெரிவித்தார்.
முன்னதாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் மீட்பு ,அவசரகாலப் பணிகளை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் கையாண்டு வந்தனர். திருத்தப்பட்ட ஏற்பாட்டின் கீழ், அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பின் கட்டுநாயக்க–கொட்டாவ , கொட்டாவ–மத்தளை பிரிவுகளில் விமானப்படை மீட்புப் பணிகளை நிர்வகிக்கும், அதே நேரத்தில் சிறப்பு அதிரடிப்படை மிரிகம அதிவேக நெடுஞ்சாலைப் பகுதியில் நடவடிக்கைகளைத் தொடரும்.
சீதுவ, கலனிகம, குருந்துகஹஹெடெக்ம, பின்னதுவ , சூரியவெவ உள்ளிட்ட அதிவேகப் பாதைகளில், அவசர காலங்களில் துரித நடவடிக்கையை உறுதி செய்வதற்காக விமானப்படை வீரர்கள் பல முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

