Friday, April 17, 2026 4:12 pm
யாழ்ப்பாணம் – தையிட்டி விகாரை காணி அளவீட்டு பணிகள் இன்று நடைபெறவிருந்த நிலையில், அளவீடு திடீரென நிறுத்தப்பட்டுள்ளதுடன் மே மாதம் அளவீட்டு பணிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியின் உரிமையாளர்களில் 17 பேரின் காணிகளை இன்று வெள்ளிக்கிழமை அளவீடு செய்வது எனவும், அதற்கு காணி உரிமையாளர்கள் சம்மதிக்க வேண்டும் என கடந்த 11ஆம் திகதி கடற்தொழில் அமைச்சர் இ.சந்திரசேகரர் மற்றும் மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஆகியோர் காணி உரிமையாளர்களிடம் கோரியிருந்தனர்.
அதனடிப்படையில் காணி அளவீட்டு பணிகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் தையிட்டி விகாரை விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரர், விகாரை காணியினை சட்டவிரோதமாக அளவீடு செய்ய முயல்வதாக பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை பலாலி பொலிஸார் விகாரை அமைந்துள்ள பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தமது காணிகளை அடையாளம் காட்ட என காணி உரிமையாளர்கள் விகாரை பகுதிக்கு இன்று காலை வருகை தந்தனர்.
இருந்த போதிலும் காலை 09.30 மணி வரையில் காணி அளவீட்டு பணிகளுக்கு காணிகளை அடையாளம் காட்ட வருமாறு காணி உரிமையாளர்களுக்கு அழைப்பு விடுத்த கடற்தொழில் அமைச்சர், மாவட்ட செயலர் , தெல்லிப்பளை பிரதேச செயலர் உள்ளிட்ட எவரும் அவ்விடத்திற்கு வருகை தராத நிலை காணப்பட்டது.
அதன்பின் மாவட்ட செயலர் ம. பிரதீபன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடியதுடன் காணி அளவீடு இடைநிறுத்தப்பட்டதாகவும் அதற்கான விளக்கத்தையும் மக்களுக்கு அளித்துள்ளார்.
தையிட்டி விகாரை விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரரின் முறைப்பாட்டை அடுத்து காணி அளவீடு நிறுதப்பட்டதால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவியது. இதையடுத்து யாழ்.மாவட்ட செயலருடன் காணி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதன் போது அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த வகையில் காணி அளவீடு செய்ய வேண்டுமென புத்தசாசன அமைச்சின் செயலாளரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக, மே மாதம் 15 ஆம் திகதிக்கு இடையில் அனைத்து பங்குதாரர்களையும் இணைந்த வகையில் தையிட்டி காணி அளவீடு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.

